Friday, December 1, 2017

பிரார்த்தனை

   ♦♦ பிரார்த்தனை ♦♦

ஐயனே! இந்த தேகமாக நான் உன் சேவகன்!
              ஜீவனாக நான் உன்னில் ஒரு அங்கம்!
              ஆத்மாவாக நானே நீ! நீயே நான்!

                                சின்மயானந்தர்......

Saturday, October 21, 2017

கவிதை

♪♪ எனது முதல் கவிதை ♪♪

இன்று என் முகம்
மிகவும் அழகு,
மனம் மிகவும்
அழகாக இருந்ததால்...
கண்ணாடி எனும்  கேமராவில்
தெரியும் அழகு
செல்போன் கேமிராவுக்குத்
தெரியவில்லை!
ஒரு மனிதனின்
முகத்தில் தெரியும்
அக அழகை
கண் எனும்
கேமிராவால் மட்டுமே
பார்க்க முடியுமோ!
கண்ணாடி,தான் காண்பதை
அப்படியே பிரதிபலிக்கிறது.
செல்போன் கேமிரா
தன்னுடைய மேதாவித்தனத்தை
அதில் புகுத்திவிடுகிறதோ!?

Thursday, October 19, 2017

பொறுமை

♪♪தினம் ஒரு குறள் ♪♪

நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப்  படும்.

பொருள்: ஒருவன் நற்குணங்கள் நிறைந்திருக்கும் நிலையிலிருந்து நீங்காதிருத்தலை விரும்புவானாயின் அவன் பொறையுடைமையைப்(பொறுமையை) போற்றிப் பாதுகாத்தல் வேண்டும்.

♦♦பொறுமை என்ற சொல்லுக்கு துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதல் என்று தான் பொதுவாக அர்த்தம் கொடுக்கப்படுகிறது.

♦பொறுமைக்கு இன்னொரு அர்த்தம் காத்திருத்தல்.இந்த உலகில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் அத்தனைக்கும் பின்னால் பொறுமையும்,காத்திருப்பும் உள்ளது.
  வாழ்க்கையில் இதை முடிக்கவேண்டும்,அதை முடிக்கவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் நிச்சயம் அதற்குரிய காரியங்களைச் செய்துவிட்டுக் கத்திருக்கவேண்டும்.காத்திருப்பு அறிவார்ந்த செயல்பாடு மட்டுமல்ல,தெய்வீகமானதும் கூட.
எதற்கும் உரிய காலம் வரவேண்டும்.அதுவரை காத்திருக்கவேண்டும்.
♦ பொறுமை என்பது பல அர்த்த விரிவுகளைக் கொண்டது. பொறுமை என்பது கஷ்டம் வரும்போது மட்டும் வெளிப்படுத்தப்படுவதல்ல.ரொம்ப சந்தோசமாக இருக்கும்போது,நிறைய அறிவிருக்கும்போது,நிறையப் பணமிருக்கும்போது எனப் பல தளங்களிலும் பல பரிமாணங்களிலும் பொறுமையும் பொறுமையின்மையும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
 
♦பொறுமையில்லாமல் நம் கஷ்டத்தை,சந்தோஷத்தை,நோயை,ஆரோக்கியத்தை,பணத்தை,செல்வாக்கையெல்லாம் நாம் வெளிப்படுத்தத் துடிப்பதாலும் வெளிப்படுத்துவதாலும் வரும் விளைவுகளைப் பற்றி நாம் யோசிப்பதில்லை.
♦கஷ்டத்தில்,நோயில்,வறுமையில் பொறுமையில்லை என்றால் அப்பிரச்சனைகள் அதிகரிக்கும்! செல்வத்தில்,செல்வாக்கில்,அறிவில் - இம்மாதிரியான விஷயங்களில் பொறுமையில்லையென்றால் அவையெல்லாம் நம்மை விட்டு நீங்க ஆரம்பிக்கும்!
♦பொறுமையின் இன்னொரு அர்த்தம் விடாமுயற்சி.இதற்கு உதாரணம் சிறு பூச்சிகள்.இந்தப் பூச்சிகள் ஒரு சுவற்றிலோ தூணிலோ ஏற முயற்சி செய்யும் போது எத்தனை தடவை வழுக்கி விழுந்தாலும் தான் செல்ல வேண்டிய இடத்தை அடையும் வரை தன் முயற்சியைக் கைவிடுவதில்லை.
♦சீன மூங்கிலின் கதை மூலமும் பொறுமையின் வலிமையை அறிந்துகொள்வோம்.
  ♥சீனாவில் இருந்த ஒரு வயதான ஏழை விவசாயி தன் வருங்கால சந்ததியினர்க்கு பயன்தரும் விருப்பத்தில் மூங்கில் விதைகளை வாங்கி நிலத்தில் போட்டு தினமும் நீரூற்றினார்.ஓர் ஆண்டு முடிந்துவிட்டபோதும் ஒன்றும் துளிர்க்கவில்லை.அவரைச் சுற்றி இருந்தவர்கள் கேலி செய்தனர்.ஆனாலும் மனம் தளராது தினமும் நீரூற்றினார்.இவ்வாறு ஐந்து வருடங்கள் கழிந்தன.வழக்கம்போல ஒருநாள் நீரூற்ற செல்லும்போது விதைகள் போடப்பட்டிருந்த இடத்தில் பச்சையாக முளைவிட்டிருந்தன.ஆறே வாரங்களில் 90அடிகளுக்கு ராட்சசத்தனமாக வளர்ந்தன மூங்கில்கள்.உலக அதிசயங்களில் ஒன்று அவை.காத்திருப்பு வீண்போகவில்லை.அதுதான் நமக்கான முக்கியமான பாடம்.எனவே,
♥கனவை விதைப்போம்!
♥அது நனவாவதற்கு நாம் செய்யவேண்டிய காரியங்களை மனம் தளராமல் செய்வோம்!
♥இது நடக்காது என்று சொல்பவர்களையும்,நமக்கே தோன்றும் அச்சங்களையும் சந்தேகங்களையும் புறந்தள்ளுவோம்!
♥அசைக்கமுடியாத நம்பிக்கை வைப்போம்!
♥பொறுமையாகக் காத்திருப்போம்!

♦பிரார்த்தனைகளை விட மிகவும் உயர்ந்தது பொறுமை தான் என்று புத்தனும்,பொறுமையாளர்களுடன் இறைவன் இருக்கிறான் என்று குரானும் கூறுகிறது. நாமும் பொறுத்திருக்க முயற்சி செய்வோமா!

Wednesday, October 18, 2017

குறள்

♪♪ தினம் ஒரு குறள் ♪♪

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.

பொருள்: நமது கோபம் பலிக்காத இடங்களில்,உதாரணமாக நமது முதலாளிகள்,எஜமானர்கள்,நம்மைவிட வலிமையும் செல்வாக்கும் வாய்ந்தவர்களிடத்தில் கோபத்தைக் காட்டுவதால் பயனில்லை.அதனால் நமக்குத் தீமையே ஏற்படும்.சரி,அப்படியானால், நம்மைவிட எளியவரிடத்தில் கோபத்தைக் காட்டலாமா என்றால் அதுவும் கூடாது! ஏன்? அப்போதும் நமக்கேத் தீமை என்கிறார்.
♦நம்மை விட எளியவர் மீது கோபப்படும்போது இம்மையில் பழியும், மறுமையில் பாவமும் வந்து சேரும் என்பது ஒருபுறம் இருந்தாலும்,கோபம் வந்தால் முதலில் பாதிக்கப்படுவது நம் உடம்புதான்.இதயத்துடிப்பு அதிகமாகி,இரத்த அழுத்தம் அதிகமாகி, வியர்த்து,கண்கள் சிவந்து,நாம் செய்யும் எதிர்வினைகளால் முதலில் பாதிக்கப்படுவது நம் இதயமும், மூளையும் தான்.
♦ ஆனால்,சில இடங்களில்,குழந்தைகளை நெறிப்படுத்த,அநியாயத்தை எதிர்த்து, மற்றவர்களைச் சரிப்படுத்த கோபத்தை வெளிப்படுத்துவதில் தவறில்லை.இப்படிப்பட்ட கோபம் ஒரு தர்மம் கூட.நமது கடமைகளில் ஒன்று. இதைத் தான் பாரதி 'ரௌத்திரம் பழகு' என்றான்.இந்த மாதிரியான கோபம் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.அப்படி வெளிப்படுத்தும்பொழுது நாம் நம்மை அந்த உணர்ச்சியின் பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டு உண்மைகளை மட்டும் ஆணித்தரமாகச் சொல்வோம்,பேசுவோம்.வார்த்தையிலும் நடத்தையிலும் நிதானம் தவறாது.
♦கோபத்தை நெருப்பைப் போல் அல்லாமல் சுடும் வெயிலைப் போல பயன்படுத்தவேண்டுமாம்.முயற்சிசெய்து பார்ப்போமா!

Tuesday, October 17, 2017

குறள்

♪♪ தினம் ஒரு குறள் ♪♪

ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

பொருள்: பிறரை அறவழியில் செலுத்தி,தானும் அவ்வழியில் சென்று வாழும் இல்லறத்தானின் வாழ்க்கை துறவற வாழ்க்கையை விடச் சாலச் சிறந்ததாகும்.

படித்ததில் பிடித்தது

♦♦படித்ததில் பிடித்தது♦♦

 (இது ராஜபாட்டை அல்ல என்ற நூலிலருந்து)

♥ எனக்கு வரும் எந்தப் புகழும்,பணமும் என் இயல்பை மாற்றிவிடக்கூடாது.என் நிம்மதியைக் குலைத்துவிடக்கூடாது..இதயத்தின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் அடிப்படை மனிதப் பண்புகளைத் தகர்த்துவிடக்கூடாது.
♥ கலைஞன் விட்டுச் செல்ல நல்ல படங்கள் மட்டுமல்ல,நற்பண்புகள் மூலம் ஆற்றவேண்டிய நற்செயல்களும் பல உள்ளன.வாழ்வின் முடிவில் நிம்மதியும் சந்தோசமும் வேண்டுமென்றால் 'நாம் யாருக்கும் கெடுதல் செய்யவில்லை...ஓரளவுக்கு நல்லவன் என்ற பெயரோடு வாழ்ந்திருக்கிறோம்'என்ற திருப்தி வேண்டும்.
♥ கிராமத்திலேர்ந்து வந்தபோது எனக்கு என்ன பலம்னு பார்த்தா பலமே கிடையாது.செல்வமோ,பேமிலி பேக்கிரவுண்டோ,நா பெரிய படிப்பாளியோ கிடையாது.என்கிட்ட பலகீனம் கிடையாதுங்கற ஒரே தகுதி மட்டும் தான் எனக்கு பலமா இருந்திச்சி.
♥ சினிமா உலகின் புகழின் உச்சியினை சிவகுமார் இன்னும் எட்டவில்லை என்கிறார்கள்.அது நூற்றுக்கு நூறு உண்மை.எட்டவே மாட்டான் என்று யாரும் சொல்லவில்லையே!அது பெரிய ஆறுதல்!
♥ இது ஒரு மாரத்தான் ஓட்டம்.பாதி ஓட்டம் நிகழும் போது முன்னால் ஓடுபவனை வெற்றி பெற்றவனாகக் கருத முடியாது.இன்னும் மீதி ஓட்டமிருக்கிறது.
  இமயமலை உச்சியில் கொடி நாட்ட எனக்கும் விருப்பமுண்டு தான்.அதை இப்போதே நாட்ட நான் விரும்பவில்லை.படத்தின் முடிவில் க்ளைமாக்ஸ் வருவது போல, வாழ்வின் இறுதிப் பகுதிகளில் உச்சப் புகழ் பெறவேண்டுமென்பது என் அவா.
 புகழின் உச்சி மட்டுமல்ல...இமயமலையின் உச்சியும் கூட கூரானது,பாதுகாப்பற்றது.கொடி நாட்ட முடியுமே தவிர,அங்குக் குடியிருக்க முடியாது.கொடியேற்றும்போது என் உருவம் சிதைந்து,குணம் அழிந்து ஆரோக்கியம் குன்றிய நிலையில் நான் காட்சியளிக்கக் கூடாது.
♥ எதுவுமே மலிவாய்,சுலபமாய்க் கிடைக்கிற இந்தத் துறையில் இதுவரை ஒழுங்கா வாழ்க்கையை வாழ்வதுதான் நான் செய்த சாதனைன்னு சொல்றதை மனதிற்கு இதமான விஷயம்னு நான் நினைக்கிறேன்.ஏனென்றால், சாதனை என்பது எப்போதுமே முறியடிக்கக் கூடியது.
                               (வளரும்)

Monday, October 16, 2017

குறள்

♪♪தினம் ஒரு குறள்♪♪

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார்.

பொருள்: விரைவில் கோபங்கொள்ளும் மன்னரைச் சார்ந்து வாழ்கின்றவர் அவரை விட்டு நீங்காமலும்,மிக அணுகாமலும் நெருப்பில் குளிர்காய்கின்றவர் போல இடை நிலத்தில் இருக்கவேண்டும்.

♦♦இங்கு வள்ளுவன் மன்னர் என்று கூறிய இடத்தில் நம் நெருங்கிய உறவுகளை வைத்து
சிந்தித்து நடந்தால் வருத்தம் ஏற்படாது என்று நினைக்கிறேன்.♦♦

Sunday, October 15, 2017

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

♥♥பிறந்த நாள் வாழ்த்துக்கள்♥♥

♦அக்டோபர் 16 என் இளைய மகனின்
பிறந்த நாள்.எனக்குக் கடவுள் தந்த பரிசுகளில்
அவனும் ஒருவன்.தம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும் சலிக்காமல் உதவும் குணமுடையவன்.
♦இன்றிலிருந்து அவன் மேஜர்.டீன் ஏஜ் பருவத்தை நல்லபடியாக அவன் தாண்டி வந்ததற்கு இறைசக்திக்கு நன்றி.இனி அவனுடைய உலகம் மேலும் விரிவடையும்.
அவனுடைய நல்ல குணங்களும் மேலும் விரிவடைந்து அவனுடைய சேவையால் இந்த
சமூகம் முழுவதும் பயனடையும் அளவுக்கு அவன் வளர்ச்சியடையவேண்டும்.இதுவே இந்தத் தாயின் விருப்பம்.
♦இறைவனின் அருட்பேராற்றல் இரவும்,பகலும் எல்லா நேரங்களிலும்,எல்லா இடங்களிலும்,எல்லாத் தொழில்களிலும் பாதுகாப்பாகவும்,உறுதுணையாகவும்,வழிநடத்துவதாகவும் அமையுமாக.

குறள்

♪♪ தினம் ஒரு குறள் ♪♪

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

பொருள்: ஒருவன் எந்தெந்நப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கிறானோ,அந்தந்தப் பொருளால் அவன்
துன்பம் அடைவதில்லை.

♦இன்றைய உலகமயமாக்கலில் பெரும் பிரச்சினையே பற்றற்று இருப்பது தான்.ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு பற்றின்
பிடியில் சிக்குண்டு இருக்கிறோம்.இதில் ஆச்சரியத்தக்க இன்னொரு பற்று சதாசர்வ
காலமும் கவலை கொண்டிருப்பது.
♦இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்ன தெரியுமா...உண்மையிலேயே கவலை கொள்வதை நாம் பெரிதும் விரும்புகிறோம்
என்று கூட நமக்குத் தெரியாமல் இருப்பது தான் நாம் வைத்திருக்கும் பற்றிலே மிகப் பெரிய பற்று.
♦நம் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக அமையேவேண்டும் என்ற எண்ணம் நம்
மனதில் தோன்றுவது நியாயம் தான்.ஆனால்
அதையே நாம் கவலையாக மாற்றாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.இந்தக் கவலையும் ஒருவகையில் பற்று தான்.
♦நமக்கு நாமே ஒரு சவாலை மேற்கொள்வோம்.நாம் அதிகம் பற்று வைத்திருக்கும் ஒரு விஷயம் அது எதுவாக
இருந்தாலும் அதை தூர எறிவோம்.இப்போதிருக்கும் மகிழ்ச்சியைவிட
அதிக மகிழ்ச்சியை உணர்வோம்.
                        (நன்றி:இன்ஃபினி)

Saturday, October 14, 2017

அப்துல்கலாம் ஐயா

♦♦இன்று அக்டோபர் 15,2017 , மறைந்த ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 86வது பிறந்த நாள்.

"நான் பிறந்தேன்அரும்பெரும் சக்தியுடன்,
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்,
நான் பிறந்தேன் கனவுடன்,
வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்,
நான் பிறந்தேன் உயர்ந்த எண்ணங்களை செயல்படுத்த,
நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்,
நான் பிறந்தேன் என்னால் முடியும்
என்ற உள்ள உறுதியுடன்,
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க,
நான் பூமியில் ஒருபோதும் தவழமாட்டேன்,
தவழவேமாட்டேன்,ஆகாய உச்சி தான்
என் லட்சியம்,பறப்பேன்,பறப்பேன்,
வாழ்வில் பறந்துகொண்டே இருப்பேன்."

♦மாணர்களுக்காக அவர் எழுதிய கவிதையை
தினமும் உரக்கப் படிப்போம்,நாமும் உயர்வோம்.

Friday, October 13, 2017

குறள்

   ♪♪தினம் ஒரு குறள்♪♪

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

பொருள்: எழுத்துக்களுக்கெல்லாம் முதன்மையானது அ. அதுபோல உலகத்துக்கு முதன்மையானவன் கடவுள்.