✋பஞ்ச மகா யக்ஞம்✋
--------------------------------
👨👩👧👦 இல்லறத்தில் இருப்பவர்கள் தினமும் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்து யாகங்கள் அல்லது யக்ஞங்கள்.
1. பிரம்ம/ ரிஷி யக்ஞம்
2. தேவ யக்ஞம்
3. பித்ரு யக்ஞம்
4. மனுஷ்ய யக்ஞம்
5. பூத யக்ஞம்
**பிரம்ம/ ரிஷி யக்ஞம்**
மகான்கள், ரிஷிகள் எழுதிய நூல்களைப் படித்தல், கேட்டல் மற்றும் அவைகளை சிந்தித்தல் ( தினமும் ஒரு திருக்குறளைப் படித்து சிந்தித்தாலே இந்த யக்ஞத்தை செய்ததாகும்). வாழ்க்கையை நன்றாக வாழ்வது எவ்வாறு என்றும், உலகத்தின் இயல்பு என்ன என்றும், நமக்கு எதிரான சூழ்நிலைகளில் மனம் தளராமல் அவற்றைக் கடந்து செல்வது எவ்வாறு என்பதையும் சாஸ்திர நூல்கள் நமக்கு கற்றுத் தருகின்றன. இவற்றைத் தினந்தோறும் படிக்கவும் வாழ்வில் பின்பற்றவும் செய்வதன்மூலம் ரிஷிகளுக்கு நாம் பட்டுள்ள கடனைத் தீர்க்கிறோம்.
**தேவ யக்ஞம்**
பூஜை, ஹோமம், ஜபம், தியானம், விரதம் போன்ற அனுஷ்டானங்கள். இவற்றில் ஏதாவது ஒன்றைக் கடைப்பிடிக்கும் போது தேவதைகளிடம் நாம் பட்ட கடன் தீர்கிறது. நமக்குப் பிடித்த ஏதாவது ஒரு தெய்வத் தை நினைந்து அவனுடைய நாமத்தை மனதிற்குள் சொன்னாலே போதும். மேலும் ஒரு எளிய வழி காலையில் எழும்போது அன்றைய பொழுது நல்லபடியாக விடிந்ததற்கு ஒரு நன்றியுணர்வும், இரவு தூங்கும்போது அன்றைய நாள் நல்லவிதமாக முடிந்ததற்கு ஒரு நன்றியுணர்வையும் வெளிப்படுத்தினாலே போதும்.( நம் கர்மவினையின் காரணமாக துன்பங்கள் ஏற்பட்டாலும் அதற்கு நடுவிலும் ஏதோ ஒரு நன்மை நடந்திருக்கும். )🌞
**பித்ரு யக்ஞம்**
👥 மூதாதையரை வழிபடுதல், பெற்றோரைப் பேணுதல். இன்றைய பெற்றோர் தான் நாளைய பித்ருக்கள். அதனால் பெற்றோரைப் பேணுவது மிகவும் முக்கியமாகக் கூறப்படுகிறது. ஆதரவற்ற முதியவர்களைப் பேணும்போதும் பித்ருக்களிடம் நாம் பட்ட கடன் தீர்கிறது.
** மனுஷ்ய யக்ஞம்**
வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்குத் தங்க இடம் கொடுத்து அமுது படைத்து விருந்தோம்புவது, குடும்ப அங்கத்தினர் அல்லாத மற்ற மனிதர்களிடம் அன்பு காட்டுவது, உதவி செய்வது போன்றவைகள் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிடம் பட்ட கடனைத் தீர்க்கிறது. இப்போது உள்ள சூழ்நிலையில் விருந்தினர் வருகை குறைந்துள்ளதால் தினமும் நாம் சமைக்கும்போது ஒரு பிடி அரிசியை எடுத்து சேகரித்து வைத்து சமயம் வரும்போது தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யலாம். 👬
**பூத யக்ஞம்**
மரம், செடி, கொடிகளை வளர்த்தல், பறவைகள், மிருகங்களுக்கு உணவளித்தல். இக் கடனைத் தீர்ப்பது மிகவும் எளிது. 🐶🐱🐿️🐜🐦🌳🌱
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்த ஐந்து யக்ஞங்களையும் தினமும் கடைப்பிடிக்க வேண்டும். இதை அனைவரும் கடைப்பிடித்தால் நம் வீடும், நாடும் நலம்பெறும்.🙏