Friday, August 28, 2020

இமய குருவின் இதய சீடன்

ஸ்ரீ  எம் அவர்களின் சுயசரிதை நூலிலிருந்து.....

கண்களில் இருந்து அன்பு பொழிய எனது முகவாயை தொட்டு,"வாக்கு வாதங்களும் விவாதங்களும் அளவில்லாததிடம் நெருங்க முடிவதில்லை. அன்பு ஒன்று தான் அதைச் செய்ய முடிகிறது. இதயத்தை திறந்து கிருஷ்ணனை பார். கோபியர்கள் அன்பு காட்டியது போல நீயும் காட்டு.." என்றார் சுவாமி அபேதானந்தர்.

குறிப்பிட்ட சிலர் மட்டும் ஏன் இப்படிப்பட்டதொரு ஒரு அசாதாரண வாழ்க்கை வாழ்கிறார்கள்? நிர்வாணமாக, அழுக்காக,விநோதமான நடத்தைகள் கொண்டவர்களாக ஏன் இருக்கிறார்கள் என்றெல்லாம் நீங்கள் யோசிக்கலாம். பைத்தியக்காரர்கள் போலத் தோற்றமளித்தாலும் இந்த ஆண்களும் பெண்களும் புனிதமானவர்கள். இவர்கள் இந்து பாரம்பரியப்படி அவதூதர்கள் என அழைக்கப்படுகிறார்கள். சூபி வழிமுறையில் இவர்களெல்லாம் மஸ்தான்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவதூதர்களும், மஸ்தான்களும் ஆன்மீகத்தில் மிக உயர்நிலையை எய்தியவர்கள். எப்போதும் இறை தொடர்பிலேயே இருப்பதால், சமூகத்துக்கு கட்டுப்படாமல், அனைத்தையும் உதறிவிட்டு பைத்தியகாரர்கள் போலவே வாழ்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒருவரை, "ஏன் இப்படி பைத்தியக்காரர் போல நடந்து கொள்கிறீர்கள்?என வினவினேன்.
"உன்மத்தம் அற்ற ஒரு மனிதனைக் கூட நான் பார்த்ததே இல்லை. ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு விதத்தில் பைத்தியமாகவே இருக்கிறான்" என்று பதில் கூறினார்.

ஆன்மீகத்தேடல் ஈடுபடுபவர்கள் அற்புதங்கள் நிகழ்த்துபவர்களைக் கண்டு  மயங்கி அவர்களின் பின்னால் போய் விடக்கூடாது என்றும், அந்த வகை அற்புதங்களை பெறுவதற்கு ஆசைப்படக் கூடாது என்றும், ஆன்மிக உயர்நிலை எய்திய அனைவரும் எச்சரித்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள். 'புனிதமானவன் என்று சொல்லிக் கொள்பவன் அற்புத சக்திகளை காட்சிப்படுத்தினால் அங்கிருந்து எவ்வளவு தூரம் விலகிச் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் விரைவாக விலகிச் சென்று விடுங்கள்' என்று ராமகிருஷ்ண பரமஹம்சரும் கூறியிருக்கிறார்.

உணவு அறையிலிருந்து மணி ஒலித்தது. படிக்கட்டில் இருந்து எழுந்தேன். ஆத்மா அதற்குண்டான உணவைப் பெற்றுக் கொண்டு இருந்ததால் அது நிறைவுடன் இருந்தது. உடல் பசியுடன் இருந்தது.

"முட்டாள் சிறுவனே! வழிகாட்டுதலுக்கு, இந்த பௌதிக உடலை நம்பி இருக்க வேண்டியதில்லை. இந்த உடலுக்கு இந்த அளவு அன்பு காட்டி உன்னை இணைத்துக் கொள்ளாதே. உனக்கு கொடுக்கப்பட்ட பயிற்சிகள் எல்லாம், பிறர் ஆதரவு எதுவும் இல்லாமல் சுயேச்சையாக சுதந்திரமாக நீ இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்! உனது கால்களில் தான் நீ நிற்கவேண்டும். ஒரு குருவினையே நம்பி இருப்பதும் கூட ஒரு தடைதான். எந்தவித தடைகளும் இல்லாமல் சுதந்திரமாக இரு." என்றார் பாபாஜி அழுத்தமாக..

அருந்ததி குகையில் தங்கியிருந்த மூன்றாவது நாள் இரவு, கடகடவென்று உருளும் ஒலி ஒன்று கேட்டு விழித்துக் கொண்டேன். இடி என்று நினைத்தேன். பாபாஜி, எப்பொழுதும் போல தூனியை நோக்கியவாறு அமர்ந்திருந்தார். அவரது பின்புறம் எனக்கு தெரிந்தது. அவரது உடலின் உருவ கோடுகள் வரைபடம் போல் தூனியின் ஒளியில் தெரிந்தது.அவரை கடந்து பார்த்தேன்.
இரண்டு மேகங்களுக்கு நடுவில் ஒரு முழு நிலவு போன்ற அளவில் ஏதோ ஒன்று வெளிப்பட்டது . அது நிலவு இல்லை .  குளுமையான வெள்ளி நிற வெண்மையான ஒளியை சிந்தும் சந்திரனுக்கு பதிலாக அந்த பொருள் நெருப்பு பந்து போன்று தகதகவென ஜொலித்துக் கொண்டிருந்தது.
அது நெருங்கி வரவர கடகடவென்று ஓசை அதிகமாகிக் கொண்டே வந்தது. அது குகையை நோக்கி வந்து பலத்த இடி ஓசை போன்ற சத்தத்துடன் தூனூயின் மீதே வந்து இறங்கியது.
நான் மிகுந்த பீதியில் இருந்ததால் என்னால் எழுந்து உட்காரக்கூட முடியவில்லை. பாபாஜியோ சிலை போன்று நேராக அசைவோ பதட்டமோ இன்றி அமர்ந்திருந்தார். நான் அவருக்கு குரல் கொடுக்க வேண்டுமென நினைத்தேன். ஆனால் எனது தொண்டைக் குரல் நாண்கள் வேலையே செய்யவில்லை . எப்படியோ சமாளித்து எழுந்து அமர்ந்தேன். எனது உடல் முழுவதும் பீதியால் நடுநடுங்கியது . இதுவரை அறியப்படாத காணக் கிடைக்காத ஒரு அற்புத காட்சி ஒன்று கண்முன்னால் விரிந்தது.
  இடி இடிப்பது போன்ற சத்தம் அறவே நின்று போனது. திடீரென்று அமைதி சூழ்ந்தது. ஏறத்தாள இரண்டு அடி குறுக்களவு இருந்த அந்த நெருப்பு பந்து செங்குத்தாக இரண்டு பகுதிகளாக பிளந்தது.
   அதிலிருந்து வெளிவந்த உருவத்தைப் பார்த்ததும் என் உடல் முழுவதும் மயிர்க்கூச்செரிந்தது . அது ஒரு மிகப் பெரிய பாம்பு . நாகப் பாம்பை போன்று படம் எடுத்தவாறு இருந்தது . அது மின்சாரம் போன்ற நீல நிறத்தில் பிரகாசித்தது. ஒளியை ஊடுருவி எளிதில் பார்க்கக்கூடிய வகையில், ஊதா நிற கண்ணாடி போன்ற பொருளால் செய்யப்பட்டது போல் தோற்றமளித்தது . உள்ளே மின்சார இலைகள் எரிந்து கொண்டிருப்பது போல் காட்சி அளித்தது .
   பாம்பு போன்று இருந்த அந்த உருவத்தின் கண்கள் ஜொலித்தன . மேலும் அது ஹிஸ் என்று மிருதுவாக சீறிக் கொண்டிருந்தது .
   அந்த பாம்பு போன்ற உருவம் தனது விரிந்த படத்தோடு குனிந்து பாபாவின் பாதங்களை தொட்டு கும்பிட்டது. அதைப் பார்த்ததும் எனது பீதி எல்லாம் மறைந்தது. பாபாஜி அதன் படத்தினை தொட்டு ஆசிர்வதித்தார் . அதன்பிறகு பாபாஜியும் பாம்பு போலவே உஸ் என்று மெதுவாகச் சீறி அதற்கு பதில் அளித்தார் .
   நான் ஏதாவது முட்டாள்தனமான கனவு கண்டு கொண்டு இருக்கிறேனா அல்லது இவையெல்லாம் நனவுதானா?
    அந்த நீல நாகப்பாம்பு தன்னை நேர்ப்படுத்திக்கொண்டு பாபாஜியை எதிர்நோக்கி அமர்ந்தது.
உஸ் உஸ் என்ற ஒலியுடன் ஒரு உரையாடல் அவர்கள் இருவருக்கும் இடையே சற்று நேரம் தொடர்ந்தது .
பிறகு பாபாஜி திடீரென்று," மது, முன்னால் வந்து  சர்ப்பலோகத்துத் தலைவரின் பிரதிநிதியை பார் என்றார். திடுக்கிட்டேன் . இருந்தாலும் முன்புறம் வந்து பாபாஜியின் பின்னே ஜாக்கிரதையாக உட்கார்ந்து கொண்டேன் .
பாம்பு உஸ் என்று சீறியது. "நாகராஜனுக்கு தலை குனிந்து வணக்கம்  செய்"என்று அவர் கூறினார்.
பாம்பின் முன்னால் கீழே வளைந்து வணங்கினேன். நெருக்கமாக இருந்த அந்த சமயத்தில் அந்த பாம்பு மிகப்பெரியதாகவும், ஜுவாலை போல பிரகாசித்த, புத்திசாலித்தனம் நிறைந்த கண்களைப் பெற்று இருந்ததையும் கவனித்தேன். பாம்பு உஸ் என மெதுவாக சீறிய வாறு அதன் இரட்டை நாக்கினால் எனது தலையைத் தொட்டது. என்னுள் இப்போது கொஞ்சமும் பயம் இல்லாமல் போனதை உணர்ந்தேன். சாந்தமான ஒரு மின்சார அதிர்ச்சி என் உடல் முழுவதும் பாய்வதை உணர்ந்தேன்.
  திடீரென அது நகர்ந்து கோளத்தினுள்  நுழைந்து கொண்டது .இரண்டு பகுதிகளும் இணைந்து மூடிக்கொண்டது. கடகட என்னும் இடி போன்ற சத்தத்துடன் அந்தக் கோளம் எழும்பி விரைவிலேயே மேகங்களினூடே மறைந்தது. பாபாஜியிடம் என்னால் இதனைப்பற்றி கேட்காமல் இருக்கமுடியவில்லை. "பாபாஜி,  நடந்ததைப் பற்றி யாரிடமாவது கூறினால் அவர்கள் என்னை பைத்தியமென்றும், ஏதோ கற்பனை கதையை சொல்கிறேன் என்றும் நினைப்பார்கள். இந்த சம்பவத்தை எனக்குள்ளேயே வைத்துக் கொள்கிறேன். ஆனால் தயவு செய்து விளக்குங்கள்.."என்று வேண்டினேன்.
  "சரியாகத்தான் சொன்னாய். உனது இந்த அனுபவத்தை யாரும் நம்ப மாட்டார்கள். ஆனாலும், உனது சுய சரித்திரத்தை எழுதும் பொழுது இதைப் பற்றி மக்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். யார் நம்புகிறார்கள் யார் நம்பவில்லை என்பதை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இதைப் பற்றி உனக்கு விளக்குகிறேன் . உண்மை பல நேரத்தில் கற்பனையை விட வினோதமாக இருக்கும்.‌.

  "பால் வண்ண வான் பாதையில் நட்சத்திர மண்டலத்தில் 18 சந்திரன்களும் ஏழு கிரகங்களும் இருக்கின்றன. ஒரு கிரகத்தின் பெயர் சர்ப்பலோகம். இதில் மிகவும் உயர் நிலையில் இருக்கும் பாம்புகள் வசித்துக் கொண்டிருக்கின்றன. இந்த பாம்புகள் எல்லாமே நாக தேவதைகள்.நீ பார்த்த அந்தப் பெரியவர் சர்ப்ப லோகத்தின் துணைத் தலைவர் ஆவார். அவர் நாகராஜா என்று அழைக்கப்படுகிறார்.ஐந்து தலை கொண்ட ஒரு தங்க பாம்பு தான் இந்த சர்ப்ப லோகத்தின் தலைவர். அவர் இந்திய புத்தகங்களில் ஆனந்தா என்று குறிப்பிடப்படுகிறார்...

"பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மனித இனம் வெறும் குழந்தைப்பருவ அறிவு வளர்ச்சியை மட்டுமே அடைந்திருந்தது. அப்போது பூமியில் இருந்த மக்களுக்கு சர்ப்ப லோகத்துடன் தொடர்பு இருந்தது.

"உயர்நிலையில் இருந்த அறிவு நிரம்பிய நாகர்கள் பூமிக்கு அடிக்கடி வந்து சென்று கொண்டிருந்தார்கள். இங்கேயே நிறைய காலம் தங்கியிருந்து மனிதர்களுக்கு கல்வி கற்பித்துக் கொண்டும் அறிவு போதனைகளை கொடுத்துக் கொண்டும் இருந்தார்கள்‌.... "பழமையான எல்லா நாகரீகங்களிலும் பாம்பினை பூஜிக்கும் வழக்கம் இருப்பதைக் கேள்விப்பட்டு இருப்பாய். அது மனிதர்கள் உயர் விழிப்புணர்வுடன் இருந்த நாகர்களுக்கு செலுத்திய மரியாதையின் வடிவம்தான்! அவர்கள் கொண்டிருந்த விவேகத்திற்காகவும், சூட்சும புத்திக்காகவும் தான் அவர்களை மக்கள் போற்றி வணங்கி வந்தார்கள்...
"நாகர்கள் தான் குண்டலினி சக்தி ரகசியத்தைப் பற்றி முதன்முதலாக கற்றுத் தந்தார்கள். அதுவும் பாம்பு வடிவத்தின் அடையாளமாகத்தான்....

"உலகுக்கு அஷ்டாங்க யோக சூத்திரங்களைக் கொடுத்த பதஞ்சலி கூட ஒரு நாகர் தான்! அவர் பாதி மனிதராகவும் பாதி நாகமாகவும் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றார். எகிப்திய பரோஹாவின் தலையிலுள்ள பாம்பும், சிவனைச் சுற்றிக்கொண்டிருக்கும் பாம்பும்  உயர் அறிவுடைமையையும் உயர் சக்தியையும் கொண்டிருந்த நாகர்களின் அடையாளத்தை குறிப்பிட்டு காட்டுவதேயாகும். சில மனிதர்களுக்கும் இந்த சக்திகளையெல்லாம் நாகா ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்து அனுக்கிரகித்திருக்கின்றார்கள்.

" ஆனால் மனிதர்கள் அதிக சக்தி வாய்ந்தவர்களாக ஆனதுமே அதிக சுயநலம் கொண்டவர்களாகவும் தந்திர குணம் கொண்டவர்களாகவும் மாறிவிட்டனர். பெரும்பான்மையினர் சுயநலத்திற்காக கொலை புரியவும் தயாராகி விட்டனர்.

" சிலர்  நாகர்கள் பெற்றிருந்த சிறப்பான அறிவு மற்றும் ஆன்மிக மேன்மைகளால் தங்களது நிலை என்ன ஆகுமோ என்று பயப்படவும் செய்தனர். மனிதர்கள் நாகர்களிடம் கொண்டிருந்த நன்றிக்கடனை மறந்து அவரிடமிருந்து பெற்ற சக்திகளையே அவர்களுக்கு எதிராக உபயோகித்தனர். ஒரு கால கட்டத்தில் நாயகர்களை அதிக அளவில் படுகொலை செய்தனர். கொன்று குவித்தனர்...

" நாகர்களின் பிரதானமான தலைவர், எஞ்சி இருக்கும் நாகர்களை எல்லாம் பூமியிலிருந்து நாகலோகத்திற்கே திரும்பி அழைத்துக் கொள்ள முடிவு செய்து விட்டார்.சில ஆன்மீக உயர்நிலை மனிதர்களைத் தவிர, மனித இனத்துடன் இருந்த எல்லா உறவுகளையும் துண்டித்தார். ஒரே இரவில், நாகர்கள் அனைவரும் நாடு, கடல் கடந்து சர்ப்பலோகத்திற்கே அழைத்துக் கொள்ளப்பட்டார்கள். நோய்வாய்ப்பட்டிருந்த நாகர்களும்,மிக வயதான நாகர்களும், தலைமையை எதிர்த்து கலகம் செய்த சில நாகர்களும் மட்டும் இங்கேயே விடப்பட்டார்கள்...

" இப்பொழுது பூமியில் ஊர்ந்து செல்லும் வகையைச் சேர்ந்த பாம்புகள் எல்லாமே அன்று பூமியில் விட்டுச் செல்லப்பட்டவைகளின் சந்ததிகளே ஆகும்.  அவைகளே எஞ்சியிருந்த தங்கள்  இனத்திற்குள்ளேயே பற்பல வருடங்களாக இனப்பெருக்கம் செய்து,வளர்ச்சியில் தடைப்பட்டு, வீரியம் குறைவாகவும் தங்களது முன்னோர்களின் உயர் குணங்கள் அற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

"சில உயர்  குண மனித இனத்தினருடன் மட்டும் சர்வலோகத்தினர் தொடர்ந்து தொடர்பு வைத்து வருகிறார்கள். ஒரு சமயம் சீரடி சாய்பாபா மூன்று நாட்கள் தனது உடலை விட்டுச் சென்றிருந்தார். நான்காவது நாள் அவர் இறந்து விட்டார் என்று பொதுமக்கள் முடிவெடுத்த போது அவர்கள் வியப்படையும் வண்ணம் பாபா தனது உடலுக்கு திரும்பி வந்தார். அந்த சமயத்தில் பாபா தனது நெருங்கிய நண்பர்களிடம் வேறொரு உலகத்துப் பிரச்சினையை தீர்த்து வைக்க தான் சென்று வந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். அவர் வேறொரு உலகம் என்று குறிப்பிட்டது சர்ப்ப லோகத்தைத்தான். அந்த பிரச்சினை என்ன என்பதை உனக்கு வெளிப்படுத்த முடியாது! அந்த பிரச்சினை முழுவதுமாக தீர்க்கப்படவும் இல்லை. அது மீண்டும் வந்துவிட்டது. நாகராஜ் குருவிடம் உதவிக்காக சென்றார். அவரது அறிவுரையின் பேரில் என்னுடன் விவாதிப்பதற்காக இங்கு வந்திருந்தார்..."என்று அந்த சம்பவத்தின் பின்னணியை விளக்கினார் பாபாஜி.

"பாபாஜி..இவைகள் எல்லாம் நம்ப முடியாதவைகளாக இருக்கின்றன. நான் எப்போதாவது எனது சுயசரிதை எழுதினால் இதனை படிப்பவர்கள் இதுவெல்லாம் புத்தி சமநிலையில் இல்லாத ஜன்னி பிடித்தவனின் பிதற்றல்கள் என்றோ அல்லது கட்டுக்கதை என்றோ ஒதுக்கி விடலாம். நான் அதைப்பற்றி கவலைப்பட போவதில்லை. நடப்பது நடக்கட்டும்..." என்றேன்.

பாபாஜி சிரித்தார்
. "மறுபடியும் சொல்கிறேன். உண்மை கற்பனையை காட்டிலும் வினோதமாக இருக்கும். இந்தக் கதையை அவர்கள் கற்பனை என்றே கூறட்டும்...
"மக்கள் தற்சமயம் தாங்கள் கொண்டுள்ள விவேகத்தாலும், வறண்ட தர்க்க சாத்திரத்தின் உதவியாலும் உயர்ந்த விழிப்புணர்வு உடைய உயிர்கள் நிறைந்த வேற்று உலகங்கள் இருப்பதை ஏற்றுக் கொள்ளாமல் போய்விடக்கூடும். இருப்பினும் பின்னாட்களில் எப்போதாவது ஒரு சமயம் அவை உண்மையிலேயே இருக்கத்தான் செய்கின்றன என்பதை உணர்ந்து கொள்வார்கள்.... "ஆனாலும் நீ உனது சுய சரித்திரத்தை எழுத தயாராகும் பொழுது விஞ்ஞான உலகம் விண்ணுலகை பற்றியும் இதர கிரகங்களை பற்றியும்  தனது அறிவாண்மையைப் பெருக்கி இருக்கும்...

"பிரபஞ்சத்தில் இதுவரை எண்ணிப்பார்த்து கூட இருக்க முடியாத இடங்களில் கிடைக்கும் நீர் மற்றும் இதர உயிர்வாழ் ஆதாரங்கள் ஆகியவை இதர கிரகங்களிலும் விண்மண்டலத்திலும் இருப்பது கண்டுபிடிக்கப் படலாம். அங்கே உயிரினங்கள் இருக்கலாம் அல்லது இருந்திருக்கலாம் என்று கருத்து வலுவாக ஆரம்பிக்கும்...

"தவறான  முன் அபிப்ராயம் இல்லாத ஏதாவது ஒரு விஞ்ஞானி உனது இந்த கதையின் மீது நியாயமான கவனம் செலுத்தலாம்...
" நடைமுறைகளுக்கு ஒவ்வாதவைகளை எல்லாம் விஞ்ஞான ரீதியாக சரியல்ல என்று ஒதுக்கும் முட்டாள்தனமான மனோபாவம் கொண்டவர்களாக இருந்து விட்டால் பிறகு இவைகளை எல்லாம் நம்பவே முடியாமல் போய்விடலாம்!

பாபாஜி, அந்த புனித மனிதரிடம் உடனே நேருக்கு நேராக அவரது பாணியில் பேச ஆரம்பித்தார்.

" சுவாமி! நீங்கள் கற்றிருக்கும் கல்வி மீது எனக்கு மிகுந்த மதிப்பு உள்ளது‌ தைரியமாக மடாதிபதி பதவியை துறந்த உங்களது செயலையும் மதிக்கிறேன். உங்களது கிரீடத்தையும், தண்டியையும் தூக்கி எறிந்து விட்டீர்கள். இன்றைக்கு ஊர் ஊராகத் திரிகின்ற சாதாரண சன்னியாசியாக இருக்கின்றீர்கள். ஆனால் உங்களது அறிவுச் சுமையும் பாண்டித்யமும் உண்மையைத் தெரிந்து கொள்வதற்கு தடையாக இருக்கின்றன. அந்த முழுமுதற் பொருளை, பிரஹ்மனை அடைய முடியாமல் தொலை தூரத்தில் இருக்கிறீர்கள். நான் பேச்சைத் தொடரலாமா?" என்று கேட்டு நிறுத்தினார் பாபாஜி.

"தயவு செய்து கூறுங்கள். நீங்கள் சொல்வதை இப்போதுதான் புரிந்து கொள்ள ஆரம்பித்து இருக்கிறேன்.." என்றார் அவர்.

" நீங்கள் பெற்றிருக்கும் அறிவு உங்களினுள்ளே முழுவதுமாக நிறைந்து இருக்கிறது. அதனால் உங்களிடம் நுழைவதற்கு காத்திருக்கிற அந்த உண்மையை பெறுவதற்கு இடமே இல்லை. முன் அபிப்பிராயங்கள் கொண்ட அறிவுச்சுமையை இறக்குங்கள். உள்ளே இருக்கும் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு காலியாக இருங்கள். உண்மையை காண்பீர்கள்."என்று பாபாஜி கூறினார்.

"யார் அறிவை வணங்குகிறார்களோ அவர்கள் இருட்டைத் தழுவுகிறார்கள்' என்ற இஷாவாஸ்ய உபநிஷத ஸ்லோகத்திற்கு உண்மையான பொருள் என்னவென்று நான் பலமுறை யோசித்ததுண்டு. இந்த ஸ்லோகத்தில் காணப்படும் அறிவு என்ற சொல்லுக்கு, முக்கியமற்ற விஷயங்களின் மூலமாகப் பெறும் அறிவு தான் என்று எண்ணி நேரடியான இந்த விளக்கத்தை ஒத்துக் கொள்ளாமல் இருந்து இருக்கிறேன். இப்பொழுது தான் சரியாக புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். தொடர்ந்து சொல்லுங்கள் ஐயா..." என்று அவர் கேட்டுக்கொண்டார்.

"உண்மை என்னவென்றால், அறிவே உண்மையைத் தெரிந்து கொள்வதற்கு தடையாக இருக்கிறது. இதை சற்று விளக்கமாகக் கூறுகிறேன். ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள விழையும்பொழுது, நாம் என்ன செய்கிறோம்? முதலில் அதை கவனிக்கிறோம். பிறகு அதைப் பற்றி நமது நினைவில் சேமித்துக் கொள்ளுகிறோம்...சரியா...?
" ஆம், ஐயா "என்று ஆமோதித்தார் அந்தப் புனித மனிதர்.

" எக்ஸ் அல்லது ஒய் பற்றி எனக்கு தெரியும் என்று நான் சொல்வேனாகில் அந்த விஷயம் எனது நினைவில் சேமிக்கப் பட்டு விட்டது என்று தான் பொருள். நினைவு என்ற வார்த்தையே கடந்தகால விஷயமாக, இறந்த காலமாக ஆகிவிட்டது. நிகழ்காலத்தில் இல்லவே இல்லை. நினைவு என்பது சேமிக்கப்பட்ட தகவல்கள். எப்பொழுதும் அது இறந்த காலத்தைத் தான் குறிக்கிறது நான் சொல்வது புரிகிறதா?"

"ஆம்."

"நிரந்தர உண்மை என்கிற விஷயம் இறந்தகால நிகழ்ச்சியாக இருக்க முடியாது. உண்மை எப்பொழுதுமே அழிவில்லாமல் இருந்துகொண்டே இருக்கிறது. எனவே அதை நமது நினைவில் சேமித்து வைத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் நினைவு என்பது கடந்த காலம். ஆனால், உண்மை என்பது இப்போது நிகழ்வதைத்தான் குறிக்கும். உண்மை எப்போதும் உயிரோட்டத்துடன் இருந்து கொண்டே இருக்கும். அறிவினால் இதனைத் தொடமுடியாது...சரிதானே?"

"சரிதான் ஐயா"

"நாம் சுமந்து கொண்டிருக்கும் அறிவுப் பெட்டகமான மூளையில், குப்பைகள் எதுவும்  இன்றி காலியாக இருக்கும் தருணத்தில் தான் அமைதியாகவும் அசைவு இல்லாமலும் வேறு எதுவாகவும் ஆக முயற்சிக்காமலும் எதையாவது பெறப் போராடாமல் இருக்கும் தருணத்தில் தான், அந்த வெற்றிடத்தில் நிரந்தரமாக இருக்கின்ற அந்த உண்மை என்கிற தெய்வம் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்கின்றது."

மிகப்பெரிய அமைதிக்கு பிறகு "ஆஹா!பெரும் அமைதி. இந்த மாதிரி பெரும் அமைதியில், அசைவில்லாமல் என் வாழ்க்கையில் எப்போதுமே அமர்ந்து இருந்தது இல்லை. எப்போதாவது ஒன்று அல்லது இரண்டு முறை ஒன்றுமே செய்யாமல் நதியை பார்த்தவாறு இருந்த பொழுது அல்லது தெளிவான ஆகாயத்தை பார்த்தவாறு இருந்த பொழுது அந்த அமைதியின் விளிம்பு வரை சென்று இருக்கிறேன்...!" என்று அந்த  முதிய மனிதர் பேசினார்.

பாபாஜி கூறினார், "அந்தப் பெரும் அமைதி உங்களின் மேலே இயற்கையாகவே ஏற்படும் பொழுது அதில் குறுக்கிட வேண்டாம். அப்படியே அமைதியாக இருங்கள். ஸ்ரீ குரு பாபாஜி, உங்களின் மீது ஆசீர்வாதங்களை வழங்கட்டும். அந்த ஆசீர்வாதங்களால் நீங்கள் நிரந்தர உண்மையை கண்டுபிடிக்குமாறு ஆகட்டும். நான் மறுபடியும் உங்களை பார்க்க போவதில்லை. இன்னும் சில தினங்களில் கோமுக்கிற்கு செல்ல இருக்கிறோம்..."என்று கூறிவிட்டு அவரிடம் விடைபெற்றுக் கொண்டார் பாபாஜி.

"எதிலும் தீவிரம் இன்றி மிதமாகத் தணிந்து இருக்கும் வரை அவை எல்லாமும் நல்லதுதான்."

"எல்லா உயிரினங்களையும் முக்தி நிலைக்கு அழைத்துச் செல்லும் வரை நான் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருப்பேனாக!"என்பது போதிசத்துவர் உறுதிமொழி.

பகல் நேரங்கள் கடினமான படிக்கும் பணிகளும், ஆழ்ந்த சிந்தனைகளும்,  உண்ணாநோன்பு களமுமாக கழிந்தன. எனது அகங்காரம் அறுத்து கூறு போடப்பட்டு என் கண்ணெதிரே காட்சிப்பொருளாக தெரியும்வரை மேற்குறிப்பிட்ட பணிகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.

பல வருடங்களுக்கு முன்னர் ராமகிருஷ்ணா மடத்தில் நான் பிரம்மச்சாரியாக இருந்த போது, சுவாமி ரங்கநாதர், "ஆசிரமம் என்பது ஒரு சிறிய உலகம். எல்லாவித மனிதர்களை அங்கே நீ சந்திக்கக்கூடும். அவர்கள் எல்லாம் பெரிய சாதகர்கள் என்றோ, அல்லது ஆன்மீகத்தில் மிக உயர்நிலையை எய்திய ஆத்மாக்கள் என்றோ நினைத்து விடாதே. உனது சாதகத்தை, பயிற்சியை உன் பாட்டுக்குச் செய்து கொண்டிரு. எப்போதும் கண்களைத் திறந்து வைத்து விழிப்புடன் இரு!"என்று கூறியது நினைவுக்கு வந்தது.

திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது, ஆன்மிகத்தில் வளர்ச்சி அடைய நினைப்பவர்களுக்கு அப்படி ஒன்றும் விசேஷ தகுதி அல்ல. எதிர்காலத்தில் உன்னிடம் வருபவர்கள் எல்லாம் பெரும்பாலும் திருமணம் ஆனவர்களாகவே இருப்பார்கள். உனக்கே திருமணம் ஆகவில்லை என்றால் திருமண வாழ்க்கையைப்பற்றி அவர்களுக்கு அறிவுரையோ உதவியோ உன்னால் செய்ய முடியாது." என்று கூறி நான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

"ஆன்மிகப் பரிணாம வளர்ச்சி என்பது தனிப்பட்ட மனிதனுக்குக் கிடைக்கும் வளர்ச்சியே ஒழிய அது கூட்டமாக நிகழ்த்த முடிகிற அற்புதம் அல்ல.  தியான முறைகளுக்கு உரிமை கோருவது எல்லாம் நல்ல பயனைத் தராது. ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரும் தனித்தன்மையானவர். பணியாற்றத் துவங்கும் பொழுது சுவரொட்டி விளம்பரங்களும், விளம்பர போர்டுகளும் கூடவே கூடாது" என்றும் கூறுவார்.

ஸ்ரீ குருப்யோ  நம

இமயகுருவின் இதய சீடன்

ஸ்ரீ எம் அவர்களின் சுயசரிதை நூலிலிருந்து சில பகுதிகள்...

 பாபாஜி ஒருமுறை, "காய்கறிகளைக் கூட சரியாக வெட்டத் தெரியாமலோ, அரிசியினை முழுமையாக சமைக்கத் தெரியாமலோ இருந்தால், இந்த உலகத்தில் நீ எப்படி அதி உன்னதமான பூரணத்தை கண்டு பிடிப்பாய்? இது எப்படி இருக்கிறது என்றால், ஒருவன் நாள் முழுவதும் பொய் சொல்லிவிட்டு முழுமையான சத்தியத்தை தேடுகிறேன் என்று சொல்வது போல இருக்கிறது..." என்று கூறினார். மேலும் அவர், அரசியல்வாதிகள் எல்லாம் சத்யமேவ ஜெயதே என்று உண்மையின் மேல் உறுதிமொழி எடுத்துக் கொள்வதைப் போல நாடகம் ஆடாதே. நமது அன்றாட வாழ்க்கையை சரிவர முழுமைப்படுத்து. அதுதான் உண்மையான பூரணத்தை அடைய வழி என்றும் சொன்னார்.

ஒரு மாலைப்பொழுதில், இரவு நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில், பாபாஜியிடமிருந்து ஒரு வித்யாசமான பாடத்தை கற்றுக் கொண்டேன்‌.  தூனியை எதிர் நோக்கி நாங்கள் உட்கார்ந்து இருக்க, அக்னி ஜுவாலைகள் நாட்டியமாடிக் கொண்டிருந்தன. பாபாஜி, "அக்னி எல்லா நாகரீகங்களிலும் புனிதமாகக் கருதப்பட்டு வந்தது. வேத காலங்களிலே அக்னிபகவான் ஒவ்வொருநாளும் பிரார்த்திக்கப்பட்டு வந்திருக்கிறார். எப்போதாவது அக்னி ஏன் இவ்வளவு முக்கியமாக கருதப்பட்டு வந்தது என்பதை நினைத்துப் பார்த்து இருக்கிறாயா? என்று கேட்டார். "உணவு சமைப்பதற்கு நெருப்பு வேண்டும்! மேலும், குளிர் காலங்களில் நம்மை உஷ்ணமாக வைத்துக்கொள்ளவும், காட்டு மிருகங்களை நெருங்கவிடாமல் தூரத்தில் நிறுத்தவும் அக்னி உதவுகிறது. அதனால்தான் என்னவோ, பண்டைய காலத்தில் அக்னிக்கு மதிப்பு கொடுத்தனர்" என்று கூறினேன். பாபாஜி சிரித்தார். "ஆம், ஆம். அதற்கு மேலேயும் பயன்கள் இருக்கின்றன. பண்டைய காலங்களில் தீப்பெட்டி கிடையாது. நெருப்பை உண்டாக்குவதற்கு இரு காய்ந்த குச்சிகளை வைத்துக் கொண்டு அக்னி பகவானிடம் பிரார்த்திப்பார்கள். ஒரு தீப்பொறி ஏற்பட்டு விட்டால் அதுவே அதிசயமாகக் கருதப்பட்டது... "அப்போதைய சிந்தனையாளர்கள், அந்த நெருப்பு, அங்கே உண்டாவதற்கு முன்னால் எங்கே இருந்தது என்று கேட்டார்கள். அந்த கட்டைகளிலே தான் அது ஒளிந்திருந்தது. சமயத்திற்கு ஏற்றவாறு வெளிப்பட்டது. எனவே, அக்னி ஆத்மாவின் அடையாளமாக கருதப்பட்டு, எங்கும் வியாபித்து, சில சூழ்நிலைகளின் கட்டாயங்களுக்கு ஏற்ப காட்சியளிக்கிறது... "மற்றொரு காரணம், அக்னி ஆத்மாவின் அடையாளமாக உபயோகிக்கப்பட்டது. ஏனென்றால், எப்பொழுதும் அக்னி மேலெழுந்தவாறுதான் எரிகிறது. எரிகிற கட்டையைக் கீழ்நோக்கி வைத்தாலும் தீயின் ஜுவாலைகள் மேல்நோக்கி தான் எழுகின்றன. அதேபோல ஒரு சிறிய தீப்பொறியே, ஒரு முழு காட்டை எரித்து விடுவதற்கு போதுமானது... ஒரு தீயின் ஜுவாலையிலிருந்து ஆயிரம் மெழுகுவர்த்திகளைப் பற்ற வைக்கலாம். அதற்குப் பிறகும் முந்தைய தீ ஜுவாலை எரிந்துகொண்டுதான் இருக்கும். எனவே,ஆத்மாவிற்கு இதைவிட வேறு எந்த அடையாளம் மிக ஏற்றதாக இருக்க முடியும்...? 

"நெருப்பு அழிக்கும் சக்தியாக மாறும்போது, எல்லாவற்றையும் சாம்பலாக ஆக்குகிறது. தீயானது அனைத்தையும் கருடிக்கிறது.. "இரக்க குணத்திற்கும், அன்பிற்கும் உரிமையான புனித அக்கினியே எல்லா சுய நலங்களையும் எரித்துச் சாம்பலாக ஆக்குகிறது. ஆஸ்திகர்கள், தங்களுக்கு எந்த வரம்புகளும் இல்லை என்று எடுத்துக் காட்டுவதற்காக இந்தச் சாம்பலை உடல் முழுவதும் பூசிக் கொள்கிறார்கள்... "பார்வைக்கு தெரியும் நெருப்பு மட்டும்தான், அக்னி என்று அழைக்கப்படுவதில்லை. எளிதில் தீப்பிடிக்கும் எல்லாப் பொருள்களும் அக்னி தான். மனித உடலில் ஜீரணத்திற்காக நடக்கும் எல்லா ஆக்க, அழித்தல் பணிகளும் ஜீரண அக்னி என்று அழைக்கப்படும். ஆசை என்னும் நெருப்பு அதிகமானாலும் குறைவானாலும் அதுவும் அக்னிதான்... "உனக்கு முன்பு ஒரு காதலி இருந்திருந்தால் அவளை முந்தைய நெருப்பு என்று கூறுவது இல்லையா?யாரும் முந்தைய காற்று என்றோ, முந்தைய தண்ணீர் என்றோ குறிப்பிடுவது இல்லை. ஏனென்றால், அன்பு, ஆசை, உள்ளுணர்ச்சி எல்லாமே ஒரு விதமான நெருப்புதான்... "கற்பனை என்பது கூட நெருப்புதான். அதனால்தான், அக்னி பல காலமாக வணங்கப்பட்டு வருகிறது. நாத் பரம்பரையில் இருக்கும் எங்களுக்கு அக்னி, எங்களைச் சேர்ந்த சுய அங்கமாகவே ஆகிவிட்டது... "தூனியைப் பற்றவைத்து எரியும் ஜுவாலைகளை பார்த்தவாறே மணிக்கணக்கில் அமர்ந்து இருப்போம். அக்னி எங்களது நண்பனுமாய் பாதுகாவலனுமாய் ஆகிவிட்டது. எங்களது மனது அந்த ஜுவாலைகளுடன் ஒன்றுபட்டு கலந்துவிடும்.... " இயற்கையின் எல்லா தன்மைகளைப் போல,  அக்னிக்கும், தனியாக ஒரு மனது இருக்கிறது. எங்களது மனதும் தீயுடன் அதாவது அக்னி பகவானுடன், இரண்டறக் கலந்து விடுகிறது. அதனால் தான், ஜுவாலைகள் நாங்கள் கேட்கும் எந்த விருப்பத்தையும் நிறைவேற்றுகிறது. இதை நீ நம்பித்தான் ஆக வேண்டும்... "எனவே, நம் உள்ளே இருக்கும் அக்னியான குண்டலினி, பரந்த உலகின் ஆக்கல், அழித்தல் சக்தியின் அங்கமாகத்தான் உள்ளது. அது, வெளியே உள்ள அகில உலக ஆக்கல் அழித்தல் சக்திகளுடன் ஒன்றுபட்டு இந்த தூனியில் பிரவேசித்து காட்சியளிக்கிறது... "தீ ஜுவாலைகள், தூனியிலிருந்து ஆர்த்தெழுந்து, ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரைக்குச் செல்வதால் மனிதன் கடவுள் ஆகிறான். அப்பொழுது பரந்துவிரிந்த எண்ண உணர்வுகளை அணுகவும் செய்யலாம், உபயோகிக்கவும் செய்யலாம், கவலைகள் மறையும். எச்சரிக்கையுடன் கவனித்தல் அவசியம்."

"பாபாஜி, யோகாவைப் பற்றியும் யோகப் பயிற்சியை பற்றியும் சொல்லுங்கள்"என்றேன். பாபாஜி புன்னகையுடன். "மது, யோகா புராதனமான விஞ்ஞானம். பின் பதஞ்சலி முனிவரால், வரைமுறைப்படுத்தப்பட்டது. பதஞ்சலியால் எழுதப்பட்ட அஷ்டாங்க யோக சாஸ்திரம், விலைமதிக்க முடியாத மாணிக்கம்... "எட்டு அங்கங்கள் கொண்ட யோகாவின் குறிக்கோள், சித்த விருத்தி நிரோதன். அதாவது மனதின் சஞ்சலங்களைத் தவிர்த்துவிடுவது என்பதாகும். தியானத்திற்குரிய யோகாவில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறை திட்டங்களை பயிற்சி செய்து அதன் பயிற்சிகளான ஆசனா, பிராணாயாமா, பந்தம், முத்திரைகள், மேலும் கிரியா மூலம் மனது அமைதிப்படுத்தப்பட்ட பிறகு அது சமாதி நிலைக்கு நுழைகிறது....
 "சமாதியில் பல வகைகள் இருக்கின்றன. சமாதி நிலை என்பது தான் அடிப்படை தேவையாகும். அதற்குப் பிறகு, உபநிஷதங்களின் கருத்துக்களைப் புரிந்து கொண்ட மனது, உயர்நிலை உணர்வுகளின் நிலைகளுக்குள் நுழைகிறது. அதனால், எல்லா கட்டுப்பாடுகளில் இருந்தும் விடுதலை அடைகிறது. இதுதான் விடுதலை நிலை அதாவது கைவல்ய நிலை. இதுதான் யோகாவின் இறுதிக் குறிக்கோள் ஆகும்." "ஆனால், பாபாஜி! யோக சக்திகள், சித்திகள், அமானுஷ்ய சக்திகளாக எங்கும் வியாபித்து இருப்பது, எல்லா சக்திகளையும் பெற்று சர்வ வல்லமையாக இருப்பது,எல்லாம் அறிந்த சர்வ ஞானியாக இருப்பது இவைகளை எல்லாம் பற்றி என்ன சொல்கிறீர்கள்?" 
 
பாபாஜி சத்தம் போட்டு சிரித்து விட்டு, "எல்லோரும் யோக சக்திகளின் மீதே நாட்டம் கொள்கின்றனர். எப்படி யோக சக்திகளை பெறுவது என்று ஒரு புத்தகத்திற்கு பெயரிட்டு விட்டால், அந்தப் புத்தகம் சூடான இட்லிகள் போல விற்றுவிடும்... "யோக சக்திகள் இருக்கின்றன. ஆனால் அவை மிக அரிதாக இருக்கின்றன. அற்புதங்கள் என கூறப்படுபவைகளை நிரூபித்து காண்பிப்பது எல்லாம் வெறும் தந்திர வேலைகள் தான். யோகா செய்யும் பொழுது, மனது ஒருமுக படுகிறது. சாதாரண மனிதன் ஒரு வேலையை செய்து முடிக்க பல வருடங்கள் ஆகும் போது யோகிகளால், அதே வேலையை குறுகிய காலத்திலேயே முடிக்க முடிகிறது.... "மேலும் மனது சஞ்சலம் இல்லாமல் இருந்து, அமைதியாக இருப்பதாலும், 'தான்' என்ற சுயநல எண்ணங்கள் இல்லாமல் இருப்பதாலும், இதர மனதுகளுடன் ஒரு தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறது. அதனால் இன்னொரு மனதினில் ஓடும் எண்ணங்களை யோகியால் உணரமுடிகிறது...
" இதனை ஆரம்ப நிலை யோகிகளால் கூட உணர முடியும். இந்த உண்மையை சரியான விதத்தில் புரிந்து கொள்ளாவிட்டால், யோகியின் எண்ணங்களும், நடவடிக்கைகளும், பக்குவப்படாத மனதினருக்கு மிகப்பெரிய வினோதங்களாகவும், ஏன்.. அற்புதங்களாகவும் கூடத் தென்படுகின்றன... "ஒன்று தெரிந்து கொள். ஆண் பெண் சேர்க்கையால் உருவான ஆணோ,  பெண்ணோ,அவர்கள் எவ்வளவு மிக உயர் நிலையில் உள்ளவராக இருந்தாலும், சர்வ வியாபியாகவோ, சர்வ சக்தி படைத்தவராகவோ அல்லது சர்வ ஞானியாகவோ  இருக்கவே முடியாது...
" ஒரு உடல் திடகாத்திரமான உணவை உண்டாலும், யோகாவின் மூலம் புத்துயிர் பெற்றிருந்தாலும், எவ்வளவு காலமானாலும் இறந்துதான் ஆகவேண்டும்...
"எனது குருவான ஸ்ரீ பாபாஜி கூட, பல நூறு வருடங்கள் வாழ்ந்து இருந்தாலும் உயிரை நீத்து தான் ஆக வேண்டும். நானும் ஒருநாள் இறந்துதான் போவேன்... 
"மனிதன் எதை அற்புதங்கள் என்று அழைக்கிறானோ அவை எல்லாம் மனிதனால் இன்னும் புரிந்து கொள்ளப்படாத இயற்கையின் சில கோட்பாடுகளினால் நடக்கிறது. எந்த யோகி, இந்தக் கோட்பாடுகளை அறிந்து இருக்கிறாரோ, அவரால் இவைகளை எல்லாம் செய்ய முடியும்" என்றார்.

"உண்மை என்னவென்றால் புத்திக் கூர்மையுடன் இருக்கக்கூடிய எந்த மனிதனாலும் எல்லாம் அறிந்த சர்வ ஞானியாக இருக்கவே முடியாது. ஆனால் இன்னொரு மனிதனின் மனதுடன், தேவைப்படும் பொழுது இணக்கமாகும் சக்தியை முயன்று அடையலாம். அப்படி அடைந்த அறிவை தற்காலிகமாக சில பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ளவும் செய்யலாம்.

"தெய்வமே தன்னை வெளிப்படுத்திக் கொள்வது போல பிரம்மாண்டமாக அமைந்து இருக்கும் இப்படிப்பட்ட இயற்கை தான் தெய்வீகம். உன்னுள்ளே நீ தேடும் தெய்வம் இங்கே உன் கண்களுக்கு எதிரிலேயே இருக்கிறது. அமைதியாக தளர்வாக இரு. நறுமணம் நிறைந்த காற்றினை சுவாசி!" என்று பாபாஜி அந்த சொர்க்கத்தை அனுபவிக்கும் வழியைக் கற்றுக் கொடுத்தார்.

"பாபாஜி, இஷாவாஸ்ய உபநிஷதம் எதை நிலை நிறுத்த பார்க்கிறது என்பதை இப்பொழுது புரிந்து கொண்டேன். 'இஷா வாஸ்யம் இதம் சர்வம்...'அதாவது எல்லாவற்றையும் விட பிரதானமான ஆண்டவன், எல்லாவற்றிலும் உள்ளே மறைந்து வசித்துக் கொண்டிருக்கிறான் என்று நெடுங்காலமாக நினைத்துக்கொண்டிருந்தேன். இப்பொழுது என்ன புரிந்து கொண்டேன் என்றால், நாம் எவற்றையெல்லாம் பார்க்கிறோமோ,  எவற்றையெல்லாம் முகர்கிறோமோ, ஸ்பர்சிக்கிறோமோ, சுவைக்கிறோமோ,அவையெல்லாம்  இஷா என்னும் ஆண்டவனைத் தவிர வேறில்லை. ஆண்டவனை வேறு எங்கும் தேட வேண்டியதில்லை..."


கண்களைத் திறந்து வைத்துக்கொண்டே தியானம் செய்யும் முறையை பாபாஜி எனக்கு விளக்கினார். 
"பலருக்கு கண்களை மூடியவாறு தியானம் செய்வது எளிதாக இருப்பதில்லை. அவர்கள் தியானத்தில் ஆழ்ந்து இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், வெளி உலகத்துடன் வைத்திருக்கும் இணைப்புகள் துண்டிக்கப்படும் பொழுது, மனது, உள்ளேயே ஒரு தனி உலகைத் தந்திரமாக உருவாக்கிக் கொண்டு, அந்த எண்ண ஓட்டங்களின் பிடியில் சிக்கிக் கொள்ளும்...
"எனவே அதற்கு பதிலாக உனது கண்களை திறந்து கொண்டு, கீழே ஓடிக்கொண்டிருக்கும் கங்கையைப் பார். உயிரோட்டம் போலவே இடைவிடாமல் பாய்ந்து ஓடிக் கொண்டிருப்பதைப் பார். அசைவற்ற குட்டையைப் போல எங்கேயும் தேங்கி விடாமல், எப்பொழுதும் மாற்றம் அடைந்து கொண்டு, எப்பொழுதும் புதிதாக பளிங்கு போல தெள்ளத் தெளிவாக, தனது  வேர்களில் இருந்து விடுபட்டு, பிரமாண்டமான பிரம்மனாகவே ஆகிறது... "பார்த்துக்கொண்டு இருக்கும்பொழுதே எல்லையில்லாத பிரபஞ்சத்தின் ஓட்டத்தில் நீயும் ஒன்றிவிடுவாய். எந்தவிதக் கற்பனையும் செய்யாதே. திறந்த மனதுடன், எந்தவிதமான முன் குறிக்கோளும், முன் அபிப்ராயமும் இல்லாமல், கவனி. தடை எதுவும் இல்லாமல் போ. அதில் மகிழ்ச்சி கொள்..."


'ஒவ்வொரு நாளும் 13 மணிநேரம் என்ற கணக்கில் 13 ஆண்டுகள் நீ தியானம் செய்து வந்து இருக்கலாம். ஆனால் ஒரு உயிர் வலியினால் துடிக்கும் போது, அதன் அழுகைக் குரலை உன்னால் கேட்க முடியவில்லை என்றால், உனது 13 ஆண்டுகளின் தியானமும் வீணாகிவிட்டது. தியானம் உனது இருதயத்தை மிருதுவாக்கவில்லை என்றால், அதை ஜன்னல் வழியே  எறிந்து விடு. அப்படிப்பட்ட தியானத்தினால் உனக்கு எந்த உபயோகமும் இல்லை!'

                             ( தொடரும்)

Sunday, August 9, 2020

எல்லாம் ஒன்றே

பாகம்:-  .2. "நீ" 

*1*  நீ யார்? இந்த உடல் நீயா?  இந்த உடல் நீயாயின்: நீ தூங்கும் பொழுது இவ்வுடலில் ஒரு பாம்பு ஊர்ந்தாலும் நீ அறியமாட்டாயே. அப்படியிருக்க நீ இவ்வுடம்பு ஆவாயா? ஒருநாளும் நீ இவ்வுடம்பு ஆகாய். ஆகையால் இவ்வுடம்புக்கு வேறாயுள்ளவன் நீ.

*2* நீ தூங்கும்போது கனாக் காண்கிறாயே; அந்தக் கனவில் உன்னை ஏதோ ஒருவனாக எண்ணிக்கொள்கிறாயே;  அவ்வொருவன் நீயா? அல்ல. அவ்வொருவன் நீயாயிருந்தால் நீ விழித்துக் கொண்டவுடன் அவ்வொருவன் எங்கே? அவ்வொருவன் நீ ஆகாமற் போனதோடு அவ்வொருவனுக்காக உன்னை நீ எண்ணியிருந்ததற்காக நீயே வெட்கப்படுகிறாய். ஆகையால் அவ்வொருவனும் நீ அல்ல. அவ் வடிவத்துக்கு வேறாயுள்ளவன் நீ.

*3* கனவும் காணாமல் நீ அயர்ந்து தூங்கினாயே; அப்பொழுது உன் நிலைமை என்ன? அந்த நிலைமை தான் உனக்கு வடிவமோ என்னில், அந்த நிலைமையை உனது வடிவமாக ஒப்புக்கொள்ள உனக்கு ஒரு நாளும் சம்மதமிராது. ஏன்?- உன் நிலைமை இன்னதென உனக்கே உணர வராத ஒரு அந்தகாரத்தை நீயாக வைத்துக்கொள்ள நீ அவ்வளவு அறிவற்றவனல்லவே. அறிவினால் மற்றப் பொருட்களை விடப் பெருமை பெற்ற நீ, அறிவற்ற அதாவது தன் உணர்ச்சியற்ற ஒரு நிலையை நீயென எப்படி ஒப்புக் கொள்வாய்? அதுதான் எப்படி உண்மையில் உன்னுடைய வடிவமாயிருக்கும்? இருக்காது. "இந்த நிலை தன்னைத்தான் அறியாத அந்தகார நிலை" என்று அறிகிற அறிவாளி நீயாயிருக்க, உன்னால் உணர்ந்து இகழப்பட்ட ஒரு நிலை நீ ஆவாயா? ஆகையால், இந்த அந்தகார நிலையும் நீ அல்ல. அதற்கு வேறானவன் நீ.

*4*  உன்னுடைய இந்த ஸ்தூல உடம்பே நீ அல்ல என்னும்பொழுது, இதற்கும் புறம்பான ஒரு பொருள் நீ ஆவாயா? ஆகவே, இவ்வுடம்பு நீ அல்லாதது போலவே, இவ்வுடம்பு க்குப் புறம்பான பொருள்களும் நீ அல்ல;  இவ்வுடம்பினுள் நீ கண்ட கனவாகிய மற்றொரு உடம்பும் நீ அல்ல; ஒன்றும் அறியாத அறியாமை வடிவாகிய சுஷுப்தியும் நீ அல்ல; இம்மூவகை வடிவத்துக்கும் இவ்வுலகத்துக்கும்  வேறாயிருப்பவன் நீ.

*5* இம்மூவகை வடிவமும் இருவகையில் அடங்கும். ஒன்று-- மற்றொரு பொருளைச் சுட்டியறிந்து கொண்டிருக்கும் நிலைமை; மற்றொன்று--தன்னைக்கூடத் தான் அறியாத நிலைமை. ஜாக்ரத்திலும்  சொப்பனத்திலும் நீ ஏதாவது ஒரு பொருளை முன்னிலையாகக் கொண்டு சுட்டறிவுடையவனாக இருக்கிறாய். ஸுஷுப்தியில் நீ ஒன்றையும் அறியாத, அதாவது உன்னைக் கூட அறியாத நிலைமையில் இருக்கிறாய். இவ்விரண்டு நிலைமையில் உன்னுடைய சகல அனுபவங்களும் அடங்கும். இவ்விரண்டு நிலைமையும் உன் சொந்த நிலை அல்ல. இந்த இரண்டு நிலைமைக்கும் வேறாய் உள்ள மற்றொரு நிலைமையை உடையவன் நீ.

*6* அந்த நிலைதான் என்னவெனில், அதுவே துரீயம் எனப்படும். துரீயம் என்றால், நான்காவது நிலை. ஏன் இப்பெயர் வந்ததென்றால் "நீ கண்ட  ஜாகரம்,சுழுத்தி, சொப்பனம் என்னும் மூன்றும் உன் நிலை அல்ல; இதற்கு வேறாகிய நான்காவது நிலைமையையுடையவன் நீ" என்பதற்காக அந்த நிலைக்கு துரீயம் என்று பெயர் வைக்கப்பட்டது.ஜாகரம், சொப்பனம்,சுழுத்தி  என்னும் மூன்றையும் ஒரு சொப்பனமாக வைத்துக்கொண்டால், அம்மூன்றினின்றும் விழித்த ஜாகரம் துரீயமாகும். ஆகவே, துரீயமானது, ஒடுக்கத்தில்  ஸுஷுப்தியைக்காட்டிலும் ஒடுக்கமுள்ளதாயும், விழிப்பில் ஜாகரத்தைக் காட்டிலும் விழிப்புள்ளதாயும் இருக்கிறது. ஆகையால், ஜாகர, சொப்பன, சுழுத்திகளுக்கு வேறாயுள்ள அந்தத் துரீய நிலையே உன் சொந்த நிலை. அதுவே நீ.

*7* அத்துரீயம் எப்படிப்பட்டதெனில் --அறிவானது ஒன்றையும் சுட்டியறியாது; அவ்வறிவு தன்னையறியாமலும் இராது. அதாவது வேறொரு பொருளையும் அறியாததாயும், ஆனால்  ஜடத்தன்மை இல்லாததாயும் இருக்கிற அந்த அறிவே துரீயமாகும். அதை ஒரு க்ஷணமாவது கண்டவன், உண்மையை கண்டவன். அதுவே நீ. 

*8* இந்தத் துரீயத்தைக் கண்டவனுடைய மேல் நிலை என்னவெனில்--  அவன் அதே நிலையில், அதாவது ஒரு பொருளையும் சுட்டியறியாத நிலையில் எப்பொழுதும் இருப்பான் என்பது ஒருவருடைய அனுபவமும் அன்று.இந்த துரீயத்தைக் கண்டவன் அந்த நிலைமையிலிருந்து இவ்வுலகில் விழிக்கிறான். ஆனால், அவனுக்கு இவ்வுலகம் பழைய உலகம் அன்று; அன்று தான் கண்ட அந்த ஏகமான துரீய அறிவு எதுவோ அதுவே இந்த எல்லாமாய் விளங்குகிறதெனக் காண்கிறான். அந்த அறிவையன்றி இவ்வுலகத்திற்கு அவன் வேறு வடிவம் கற்பித்துக் கொள்ள மாட்டான். ஆகவே, அவன் தனக்குள் கண்ட அதையே  புறம்பில் வேறு வடிவமாகக் காண்கிறான். பழைய பேதம் ஒழிந்து அபேத நிலையை இப்பொழுது அவன் எங்கும் காண்கிறான். இப்பொழுது எல்லாம் அவன். அவனையன்றி ஒன்றும் இல்லை. கண் மூடினும் விழிக்கினும் எது எவ்வாறாயினும் எல்லாம் அவனுக்கு ஒரே நிலை. அதுவே பிரம்ம நிலை. அதுவே உள்ளபடி உள்ள நிலை. அவ்வுண்மை நிலையே நீ.

*9* இதற்குமேல் யாதொரு நிலையும் இல்லை. உள் என்றும் புறம்பு என்றும் சொல்லும் சொல்லுக்கு அவனுக்குப் பொருள் இல்லை. எல்லாம் ஒன்று. அவன் உடம்பும் சொல்லும் எண்ணமும், அவனுக்கென்று சுயநயத்தோடு உழைத்தலை மறந்துவிடும். அவற்றின் உழைப்பெல்லாம் எல்லாருக்கும் எல்லாப் பொருளுக்கும் பொதுவான அருள் உழைப்பு. "தான்" என்ற துண்டு போனது போனது தான். அந்த அகம்பாவத்துக்கு மறுபடி உயிர்த்தெழுதல் ஒரு நாளும் கிடையாது. இதனால் இவன் அப்பொழுதே முக்தன் என்று சொல்லப்படுகிறான். இந்த ஸ்தூல உடம்பு இருந்தாலும், அது அவன் இருப்பு அன்று. இந்த ஸ்தூல உடம்பு இறந்தாலும்,அது அவன் இறப்பு அன்று. அவன் நித்யன். அவனைத் தவிர ஒன்றும் இல்லை. அவனே நீ. 

*10* தெய்வம் என்பது எது?அருள் வடிவமானது. அருள் என்பது எது? தான் என்ற  துண்டான எண்ணம் அற்றது. இந்நிலைமை ஒன்று உண்டு என்பதை ஒருவன் உணர்வது எப்படி? தான் அந்த நிலையை பெற்றால் தான். அந்த நிலையைப் பெற்றவன் "தெய்வத்தோடு ஒன்றாகித் தெய்வத்தை அறிந்தான் "என்று வேதத்தில் புகழப்படுகிறான். ஆதலின், ஒருவன் இவ்வுலகத்தில் அடையக்கூடிய நன்மையும், உலகத்துக்குச் செய்யக்கூடிய நன்மையும் இந்த அபேத நிலையைப் பெறுதலே. உண்மையில் இதை அன்றி வேறு நிலைகள் இல்லை. வேறு நிலைகளெல்லாம் அறியாக் காலத்தில் தோற்றுபவை. அறிந்தவனுக்கு இருப்பது ஒரே நிலைதான் அதுவே நீ.

Tuesday, August 4, 2020

எல்லாம் ஒன்றே

எல்லாம் ஒன்றே என்ற நூலின் முதல் பாகத்தின் தொடர்ச்சி...

*7* இவ்வுலகத்தில் பொருள்களெல்லாம் வேறுவேறாகத் தோன்றுகின்றனவே, ஒன்று என்று எப்படி எண்ணுவேன், அதற்கு ஒரு வழி உண்டா? என்று கேள்; சொல்லுகிறேன்: ஒரு மரத்தில் இலை வேறு,பூ வேறு, காய் வேறு,கிளை வேறு - இப்படி காண்கிறோமே, ஆனாலும் அவையெல்லாம் ஒன்றே. மரம் என்ற சொல்லில் அவ்வளவும் அடங்கியதே. அவ்வளவுக்கும் மூலம் ஒன்று; உயிர் ஒன்று; அது போலவே, இவ்வுலகில் வேறு வேறாகக் காணப்படும் - எல்லா பொருள், எல்லா உடல், எல்லா உயிருக்கும் - மூலம் ஒன்றே, உயிர் ஒன்றே. ஆகையால் எல்லாம் ஒன்றே.

*8* ஓ! நல்லவனே! எல்லாம் ஒன்றென்பது நன்மைக்கோ தீமைக்கோ, நீயே கவனி. தன்னைப் போலப் பிறரையும் பிறரைப் போல தன்னையும் பார்க்கிறவனே நன்மையில் நடப்பான் என்றால், தானாகவே பிறரையும் பிறராகவே தன்னையும் எண்ணுகிறவனுக்குத் தீமை எப்படி வரும்? ஒன்றே என்று எண்ணுவதை காட்டிலும் உயர்ந்த வழி நன்மைக்கு வேறு இருக்குமானால் சொல். ஒரு நாளும் வேறு வழிகள் இவ்வளவு நன்மை தரமாட்டா. ஒன்றென்று எண்ணுவதை விட அதிகமாக எப்படி மற்ற உயிர்களிடத்தில் ஒருவன் அன்பாய் இருக்க முடியும். ஒன்றென்றே எண்ணு;  ஒன்றென்றே நேசி. உண்மையில் எல்லாம் ஒன்றே.

*9* ஒன்றென்று அறிந்தவன் மனது அடைந்த சாந்தம், ஆறுதல் யாருக்கு உண்டு! அவனுக்குக் கவலை இல்லை. எல்லாருடைய நன்மையும் அவனுடைய நன்மையாயிருக்கிறது. பிள்ளைகளினுடைய நன்மையை, தாய் தனது நன்மையாக கருதுகிறாள். ஆயினும், தான் வேறு, அந்தப் பிள்ளைகள் வேறு என்ற ஒரு எண்ணம் அவளுக்கு இருப்பதனாலே, அவள் அன்பும் பரிபூரண அன்பு அன்று. எல்லாம் ஒன்று என்று அறிந்த ஞானியின் அன்போ, தாய் அன்பிலும் மேலான அன்பு. ஒன்றென்று அறிந்து கொள்வதை விட இவ்வன்பு வருவதற்கு வேறு வழி இல்லை. ஆதலால் எல்லாம் ஒன்றே.

*10* இவ்வுலகமெல்லாம் உன்னுடைய அழியா உடம்பாகவும், நீ இவ்வுலகத் துக்கெல்லாம் அழியாத உயிராகவும் பார். இவ்வாறு நீ பார்ப்பதில் தீமை உண்டானால் சொல். தீமை இல்லாத வழியில் நடப்பதற்கு யார்தான் அஞ்சுவார்கள்? தைரியங்கொள். வேதம் இந்த உண்மையைத்தான் சொல்லுகிறது. உன்னைத் தவிர ஒன்றும் இல்லை. எல்லா நன்மையும் உனக்கு உண்டு. நீ நன்மையே வடிவாகிறாய். உன்னால் பிறர் அடைவதெல்லாம் நன்மையே. தன் உயிருக்கும் தன் உடலுக்கும் தீமை செய்வார் யார்? உடலில் புண் உண்டானால் சிகிச்சை செய்கிறோம்; அதில் உடலுக்குச் சிறிது துன்பம் உண்டாயினும் அது நன்மையின் பொருட்டே. அவ்வாறு நீ செய்கிற சில செய்கைகளும் இருக்கும்; அதுவும் உலக நன்மையின் பொருட்டே. அதனால் நீ பேத புத்தி உடையவனாகமாட்டாய். சுருக்கமாய்ச் சொல்லுகிறேன்:- ஒன்று என்று உணர்ந்தவன் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடப்பான். ஒன்று என்ற உணர்ச்சி, அவனை உண்மையில் நடத்துகிறது. அவனுக்குத் தவறுதல் என்பது கிடையாது. அவன்தான் உலகத்தில் கண்காணவந்த தெய்வம். எல்லாம் ஒன்றே.

எல்லாம் ஒன்றே

முக்திக்கு மிகச்சிறந்த வழி என்று ரமண பகவானால் கூறப்பட்ட "எல்லாம் ஒன்றே" என்னும் நூலை இனி சிந்திப்போம்..

முதல் பாகம்

1. ஒன்று.

*1* உன்னால் காணப்பட்ட இவ்வுலகமும், இவ்வுலகத்தைக் காண்கிற நீயும் எல்லாம் ஒன்றே.

*2* நான் என்றும், நீ என்றும், அவன் என்றும், அவள் என்றும், அது என்றும் நீ எண்ணுகிற எல்லாம் ஒன்றே.

*3* சித்து- அதாவது அறிவுடையது என்று நீ எண்ணுகிற உயிர்களும், ஜடம்- அதாவது அறிவற்றது என்று நீ எண்ணுகிற பூமி,ஜலம், நெருப்பு, காற்று முதலியவைகளும் எல்லாம் ஒன்றே.

*4* எல்லாம் ஒன்று என்று நீ எண்ணுவதனால் உண்டாகும் நன்மை, வேறு வேறு என்று எண்ணுவதனால் உண்டாவதில்லை. ஆகையால் எல்லாம் ஒன்றே.

*5* எல்லாம் ஒன்று என்று எண்ணுவதனால் உனக்கும் நன்மை; பிறருக்கும் நன்மை. ஆகையால் எல்லாம் ஒன்றே.

*6* நான் வேறு, நீ வேறு, அவன் வேறு என்று இவ்வாறு எண்ணுகிறவன், தனக்கு ஒருவிதம் நடப்பான்; பிறருக்கு ஒருவிதம் நடப்பான். அவ்வாறு நடக்காமலிருக்க அவனால் முடியாது. நான் வேறு, பிறர் வேறு என்று எண்ணிக்கொண்டிருக்கும் எண்ணம் ஒரு விதையாக இருந்து, தனக்கு வேறு பிறருக்கு வேறாக நடக்கிற பக்ஷபாதமாகிய மரத்தைத் தோற்றுவிக்கின்றது. தானும் பிறரும் எல்லாமும் ஒன்றே என்று அறிந்தவன், எப்படி நியாயம் தவறி நடப்பான்? பேதம் என்கிற விதை உள்ளவரையில் உன்னை அறியாமலே நீ தீமையில் பக்ஷபாதமாய் நடத்தலில் இறங்கிவிடுவாய். ஆதலால், பேதபுத்தியை விட்டுவிடு. எல்லாம் ஒன்றே.