வேற்றுமையைக் கடந்து கணவன் மனைவிக்குள் ஒற்றுமையைக் காண என்ன செய்ய வேண்டும்?
இதில் கூறும் அனைத்தும் எல்லா உறவுகளுக்கும் பொருந்தும். ஆனால் கணவன் மனைவிக்குத்தான் மிக அதிகமாக இதில் தெளிவு இருக்க வேண்டும்.
முக்கியமான 8 விஷயங்களை மட்டும் பட்டியல் இட்டிருக்கிறேன். அனைத்தையும் கடைசி வரை கட்டாயம் படியுங்கள். இல்லை என்றால் கடைசி ஒன்றையாவது படியுங்கள்.
********
1. வார்த்தையைக்கடந்து புரிந்துகொள்ள வேண்டும்.
பேச்சில் 9 வகை உண்டு.
அதிகாரமாக பேசுவது.
உளறுவது.
கத்துவது.
அதிகமாக பேசுவது.
மனதில் இருப்பதை அப்படியே பேசுவது ( straight forward ) , பேசாமலேயே இருப்பது (அ) திக்கித்திக்கி பேசுவது ,
இனிமையாக பேசுவது, தத்துவமாக (அ) ஆறுதலாக பேசுவது ,
பாலியல் கலந்து பேசுவது.
உங்களுக்கு எதெல்லாம் இதில் உள்ளது. உங்கள் துணைக்கு எதெல்லாம் உள்ளது என்பதை பிரித்துக்கொள்ளுங்கள்.
சிலருக்கு இனிமையாக பேச வரும். சிலருக்கு வராது. அதை அப்படி புரிந்துகொள்ளுங்கள். இனிமையாக பேசுபவர் எல்லாம் நல்லவர் கிடையாது. கடுமையாக பேசுபவர் எல்லாம் கெட்டவர்கள் கிடையாது.
ஏன் இப்படி பேசுகிறாய்? ஒழுங்காக பேசத்தெரியாதா என்று கேட்டுக்கொண்டே இருந்தால் வாழ்க்கை முழுதும் சண்டை இருக்கும். தயவு செய்து உங்கள் பேச்சின் இயல்பை புரிந்துகொண்டு அவரின் பேச்சின் இயல்பையும் புரிந்துகொண்டு காயங்களை குறைக்க பாருங்கள். இரண்டையும் ஏற்கப்பழகுங்கள்.
2. உங்கள் கனவை அவர் காணவேண்டும் என்று விரும்பாதீர்கள்
உங்களுக்கு வெளிநாடு போகவேண்டுமானால் நீங்கள் போக முயற்சியிங்கள். இன்னொருவருக்கு விருப்பம் இல்லை என்றால் அவரை தொந்தரவு செய்யாதீர்கள்.
வார இறுதியிலும் உங்களுக்கு ஏதாவது செய்துகொண்டே இருக்கத்தோன்றினால் கனவை நோக்கி ஓட நினைத்தால் நீங்கள் செய்யுங்கள். இன்னொருவருக்கு படுத்து தூங்க மட்டுமே பிடித்தால் அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். மாற்ற நினைக்காதீர்கள். பெருங்கனவுகளே சரி என்று விவாதம் செய்வதும் தவறு. எளிமையான வாழ்க்கையே சரி என்று எதிர்வாதம் செய்வதும் தவறு. இரண்டுமே சரி.
3.சமூக ஒழுங்கை வீட்டிற்குள் கொண்டு வராதீர்கள்
சமூக ஒழுங்கு - சமூகத்திற்கு தேவையானது. வீட்டிற்கு அல்ல.
சமூக ஒழுங்கு என்பது ஒரு பாவனை. அந்த பாவனை நாம் முன் பின் அறியாதவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை தீர்மாணிப்பதற்காக மட்டுமே.
அதை கொண்டு வந்து வீட்டில் வைத்தால் என்ன ஆகும்?
24 மணிநேரம் ஒன்றாக வாழும் பொழுதும் , ஒருவரை ஒருவர் உண்மையை புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டுமே ஒழிய , இருவருக்குள் சமூக ஒழுங்கு என்ற பெயரில் நடித்துக்கொண்டிருந்தால் நிம்மதி துளியும் இருக்காது.
இருவருக்கும் ஒழுங்கு பிடித்தால் செய்து கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து நடித்துக்கொண்டிருக்காதீர்கள். உடன் இருப்பவர் தவறாக நினைத்துவிடுவார் என்று பயந்து பயந்து வாழ்ந்தால் நீங்கள் நிரந்தரமான அழுத்தத்திற்கு சென்று விடுவீர்கள். அதன் வெளிப்பாடாக வீட்டில் சண்டை இருந்துகொண்டே இருக்கும்.
ஒருவருக்கு ஒருவர் உண்மையில் என்ன வேண்டும் என்பது தெளிவானால் நிம்மதி பிறக்கும்.
4. ஞானம் அடைய திருமணம் சிறந்த வழியே
இந்த உலகத்தில் உங்களுடனேயே உண்டு உறங்கி வாழும் ஒரே ஒரு ஜீவனை புரிந்துகொண்டால் உலகத்தில் உள்ள எல்லோரையும் புரிந்து கொள்ள முடியும். அதை விட்டுவிட்டு ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொண்டிருந்தால் கோபப்பட்டுக்கொண்டிருந்தால் சண்டையிட்டுக்கொண்டே இருந்தால் நீங்களும் நிம்மதியாக இருக்க முடியாது. இந்த உலகம் முழுவதும் எதிர்மறையாகவே தோன்றும்.
உங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் வேற்றுமை புரிந்துகொள்ளுங்கள். எல்லா வேற்றுமையும் உண்மை என ஏற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு சாப்பாட்டுக்கடைக்கு செல்கிறீர்கள். அங்கு நீங்கள் வெளிச்சம் நிரம்பிய இடத்தில் அமர நினைக்கிறீர்கள். உங்கள் துணை கொஞ்சம் வெளிச்சம் குறைந்த இடத்தில் அமர நினைக்கிறார் என்றால் இரண்டில் எது சிறந்தது என்று பார்க்காதீர்கள். ஒரு முறை வெளிச்சத்திலும் ஒரு முறை வெளிச்சம் குறைந்த இடத்திலும் இருங்கள்.
இன்னொருவரின் விருப்பத்தை சரி பார்ப்பதை நிறுத்துங்கள். இருவரையும் அவர் அவர் இடத்தில் நின்று ஏற்றுக்கொள்ளுங்கள்.
5. அழுத்தம் அதிகமானால் கணவன்-மனைவி என்ற அடையாளங்களை தூக்கி எறியுங்கள்.
கணவன்-மனைவி எனும் பொழுது நிறைய அடையாளங்கள் குழப்பங்கள் நம்பிக்கைகள் எல்லாம் வந்து சுமையாக்கினால் அதை தூக்கி எறிந்துவிட்டு boyfriend-girl friend என்ற பதத்திற்கு வந்துவிடுங்கள்.
ஒரு பெண்ணோடு ஒரே வீட்டில் வசிப்பது ஒரு ஆணுக்கும் ஒரு ஆணோடு ஒரே வீட்டில் வசிப்பது ஒரு பெண்ணுக்கும் மிகவும் பிடிக்கும். அந்த இடத்தில் நின்று வாழ்க்கையை அணுகுங்கள்.
உங்கள் மனைவியை ஒரு பெண்ணாக புரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் கணவனை ஒரு ஆணாக புரிந்துகொள்ளுங்கள்.
இது தொடக்கம் மட்டுமே. பின்னர் இருவரும் உயிர் என்ற இடத்தில் இன்னும் இணக்கமாக சேர்ந்துவிடலாம்.
யாரோ ஒரு பெண்ணின் ஆணின் ஆசையை அப்படியே புரிந்துகொள்ளும் நாம் கணவன் மனைவி என்று வந்துவிட்டால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற இடத்திற்கு வருகிறோம். அதனாலேயே அதை தூக்கி எறியுங்கள்.
6. பிரிவது மட்டுமே தீர்வல்ல
மறுமணத்திற்கு எதிரானவன் அல்ல நான். ஆனால் இப்பொழுது இருக்கும் திருமணத்தை முதலில் தெளிவாக அணுகினீர்களா என்பதை கவனிக்கவேண்டும். இல்லை என்றால் எத்தனை திருமணம் செய்தாலும் புரியோஜனம் இருக்காது.
பிரிவது தான் தீர்வு என்று முடிவுக்கு வரும் முன்
1. திருமணம் என்றால் என்ன என்றாவது புரிந்ததா?
2. இனி மறுமணம் செய்தால் மகிழ்ச்சியாக வாழமுடியும் என்று நம்பிக்கை இருக்கிறதா?
3. இப்பொழுது இருக்கும் துணையை உண்மையிலேயே எந்த குழப்பமும் இல்லாமல் புரிந்துகொண்டீர்களா?
4. உங்களுக்கு திருமணம் முதலில் தேவையா?
உங்களுக்கு ஏற்றவர் வேறு எங்கோ இருக்கிறார்.இவர் இல்லை என்று நம்புவதை நிறுத்துங்கள். அது கடைசி உபாயம்.
முடிந்தவரை இருப்பவரை புரிந்துகொள்ள முடியுமா என்று பாருங்கள். எல்லோரும் மனிதர்கள். எல்லோரும் நல்லவர்கள். எல்லோருக்குள்ளும் உயிர் இருக்கிறது. அதனால் எல்லா முன் தீர்மாணங்களையும் விடுத்து கொஞ்சம் ஆழமாக சிந்தியுங்கள்.
7. நல்ல நினைவுகளை உருவாக்கப்பாருங்கள்
ஒன்றாக ஒரு காபி குடிக்கக்கூட முடியவில்லை. இவரோடு எதற்கு வாழவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதற்கு தவறான நினைவுகளே காரணம். காபி குடித்தாலே சண்டையில் தான் முடியும் என்று நினைத்தாலும் அதற்கும் தவறான நினைவுகளே காரணம்.
கெட்ட நினைவுகள் தான் பல பிரிவுக்கு காரணம். நல்ல நினைவுகளை இன்றிலிருந்து உருவாக்கினாலே புதிய வாழ்க்கையை மறுபிறவி எடுக்கும் அளவிற்கு உங்கள் வாழ்க்கையையே மாற்ற முடியும்.
இருவருக்கும் எது பொதுவான குணம் உள்ளதோ அது எவ்வளவு சரியதாக இருந்தாலும் அதை முடிந்த அளவு தினசரி வாழ்க்கையில் கொண்டு வாருங்கள்.
இருவருக்கும் TVசினிமா பார்க்கப்பிடிக்குமா.. இருவருக்கும் அதில் ஒத்துவரும் ஏதேனும் ஒன்றை பிடித்துக்கொள்ளுங்கள். உடன் இருங்கள். நடக்கப்படிக்குமா ஓடப்பிடிக்குமா ஆடப்பிடிக்குமா இசைபிடிக்குமா ஆன்மீகம் பிடிக்குமா எதுவாகிலும்...
குறைந்தது 2-4 மணிநேரம் ஒன்றாக இருவருக்கும் பிடித்த விஷயத்திற்குள் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். அந்த உடன் இருத்தலில் முடிந்த வரை இருவருக்குள்ளும் நல்ல நினைவுகள் உருவாக்க முயற்சிசெய்யுங்கள்.
இது தான் சரி என்று விவாதம் செய்யாமல் இருவருக்கும் சரி என்று தோன்றுவதை கைக்கொள்ளுங்கள். அந்த நேரத்தில் கண்டிப்பாக mobile பார்ப்பது எதுவும் கூடாது.
நல்ல நினைவுகள் வளரவளர மீண்டும் உங்களுக்குள் மகிழ்ச்சி பொங்குவதை உணர்வீர்கள்.
8. உயிர் வளர்த்தல்
எல்லாவற்றையும் கணக்கிட்டுக்கொண்டே இருக்காதீர்கள். அறிவைத்தூக்கி குப்பையில் போடுங்கள்.
அன்று நீ இதை செய்தாய் அதனால் இன்று நீ இதை சுமக்க வேண்டும் என்ற இடத்திற்கு தள்ளாதீர்கள்.
நீங்கள் ஒருவருக்கு நல்லது செய்தால் அவர் திருப்பி ஏதாவது செய்யவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் நல்லது செய்தாலே உங்கள் உயிர் வளரத்துவங்கிவிடும். அது ஆற்றலை கொடுக்கும். நிம்மதியைக்கொடுக்கும்.
அவர் ஏன் எதுவும் செய்யவில்லை. நான் மட்டும் ஏன் தியாகியாக இருக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள். சண்டை இடாதீர்கள். நீங்கள் ஒருவருக்கு நல்லது செய்வதால் பெற்ற அணைத்து ஆற்றலையும் எதிர்பார்ப்பால் சண்டை இடுவதால் இழந்துவிடுவீர்கள்.
இதை தான் கடமையைச்செய் பலனை எதிர்பாராதே என்றனர்.
நீங்கள் அதிகம் செய்யச்செய்ய உங்கள் உள்ளே உயிர்வளரும். ஆற்றல் பெருகும். மெல்ல உங்கள் துனைக்கும் உங்களை மிகவும் பிடிக்கும். அவரும் ஏதாவது செய்ய வேண்டும் என்று தூண்டப்படுவார். அப்பொழுதும் அவருக்கு எந்த விதத்தில் செய்யவேண்டுமோ அப்படித்தான் அவர் செய்வார். அதனால் அதுவரை கவலையும் கூடாது.
எதிர்பார்ப்பும் கூடாது.
உங்கள் துணை வந்து ஆசையாக உங்களுக்காக ஏதாவது செய்யும் பொழுதும் அவர் உங்களுக்காக ஒரு செயல் செய்கிறார் என்று ஆனந்தப்படவேண்டுமே ஒழிய நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் செய்யவில்லையே என்று கவலைக்குள் செல்லக்கூடாது.
இது அடிமைத்தனமோ தியாகமோ இல்லை. கொஞ்சம் பொறுத்தால் உங்களுக்குள் உயிர் வளர்வதை உணர்வீர்கள். எப்பொழுதெல்லாம் வாய்ப்பு வருகிறதோ எப்பொழுதெல்லாம் உங்கள் துணை உதவி என்று கேட்கிறாரோ அப்பொழுதெல்லாம் எப்படியாவது உதவுங்கள். உங்களுக்கு வராதைத்தைகூட செய்ய முயற்சியுங்கள். ஆனால் மனநிறைவோடு அதை செய்ய வேண்டும். குழப்பம் கூடாது. எதிர்பார்ப்பு கூடாது.
time waste என்று எண்ணாதீர்கள். உங்கள் உயிர் வளர்ப்பதை விட இந்த உலகித்தில் நீங்கள் செய்யவேண்டிய விஷயம் ஒன்றுமே இல்லை.
அதற்கும் திருமணமே ஒரு நல்ல வாய்ப்பு.
நமக்கு எல்லாவற்றையும் கட்டாயாமாக்கி வாயில் திணிப்பதால் தான் ஏற்க மறுக்கிறோம் உண்மையான காரணம் தெரிந்தால் தயங்காமல் நம்மோடு இருப்பவருக்கு எது வேண்டுமானாலும் செய்வோம்.
உண்மையை உணருங்கள். எவ்வளவு முடியுமோ உங்கள் கணவருக்கோ மனைவிக்கோ செய்துகொண்டே இருங்கள். அதை செய்யும் பொழுது நிதானம் இழக்காதீர்கள். உங்களுக்குள் இருக்கும் உயிர் வளர வளர நிம்மதியும் பேராணந்ததையும் உணர முடியும்.
வெளியே நண்பர்களோடு இருக்கும் பொழுதும் வீட்டிற்குள் வந்து உங்கள் துணையோடு இருக்கும் பொழுதும் ஒரே மாதிரியான ஆனந்தத்தை உங்கள் மனம் உணரும். அதற்கு பெயர் தான் நிம்மதி. அதை விட இந்த உலகத்தில் வேறு ஒரு சாதனை இல்லை.
நன்றி
திரு லஷ்மண் #thirulakshman
*துணை - என்பது spouse என்ற அர்த்ததில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால் மூன்று பாலினத்திற்கும் இது பொருந்தும்.
No comments:
Post a Comment
நன்றி....