Sunday, August 9, 2020

எல்லாம் ஒன்றே

பாகம்:-  .2. "நீ" 

*1*  நீ யார்? இந்த உடல் நீயா?  இந்த உடல் நீயாயின்: நீ தூங்கும் பொழுது இவ்வுடலில் ஒரு பாம்பு ஊர்ந்தாலும் நீ அறியமாட்டாயே. அப்படியிருக்க நீ இவ்வுடம்பு ஆவாயா? ஒருநாளும் நீ இவ்வுடம்பு ஆகாய். ஆகையால் இவ்வுடம்புக்கு வேறாயுள்ளவன் நீ.

*2* நீ தூங்கும்போது கனாக் காண்கிறாயே; அந்தக் கனவில் உன்னை ஏதோ ஒருவனாக எண்ணிக்கொள்கிறாயே;  அவ்வொருவன் நீயா? அல்ல. அவ்வொருவன் நீயாயிருந்தால் நீ விழித்துக் கொண்டவுடன் அவ்வொருவன் எங்கே? அவ்வொருவன் நீ ஆகாமற் போனதோடு அவ்வொருவனுக்காக உன்னை நீ எண்ணியிருந்ததற்காக நீயே வெட்கப்படுகிறாய். ஆகையால் அவ்வொருவனும் நீ அல்ல. அவ் வடிவத்துக்கு வேறாயுள்ளவன் நீ.

*3* கனவும் காணாமல் நீ அயர்ந்து தூங்கினாயே; அப்பொழுது உன் நிலைமை என்ன? அந்த நிலைமை தான் உனக்கு வடிவமோ என்னில், அந்த நிலைமையை உனது வடிவமாக ஒப்புக்கொள்ள உனக்கு ஒரு நாளும் சம்மதமிராது. ஏன்?- உன் நிலைமை இன்னதென உனக்கே உணர வராத ஒரு அந்தகாரத்தை நீயாக வைத்துக்கொள்ள நீ அவ்வளவு அறிவற்றவனல்லவே. அறிவினால் மற்றப் பொருட்களை விடப் பெருமை பெற்ற நீ, அறிவற்ற அதாவது தன் உணர்ச்சியற்ற ஒரு நிலையை நீயென எப்படி ஒப்புக் கொள்வாய்? அதுதான் எப்படி உண்மையில் உன்னுடைய வடிவமாயிருக்கும்? இருக்காது. "இந்த நிலை தன்னைத்தான் அறியாத அந்தகார நிலை" என்று அறிகிற அறிவாளி நீயாயிருக்க, உன்னால் உணர்ந்து இகழப்பட்ட ஒரு நிலை நீ ஆவாயா? ஆகையால், இந்த அந்தகார நிலையும் நீ அல்ல. அதற்கு வேறானவன் நீ.

*4*  உன்னுடைய இந்த ஸ்தூல உடம்பே நீ அல்ல என்னும்பொழுது, இதற்கும் புறம்பான ஒரு பொருள் நீ ஆவாயா? ஆகவே, இவ்வுடம்பு நீ அல்லாதது போலவே, இவ்வுடம்பு க்குப் புறம்பான பொருள்களும் நீ அல்ல;  இவ்வுடம்பினுள் நீ கண்ட கனவாகிய மற்றொரு உடம்பும் நீ அல்ல; ஒன்றும் அறியாத அறியாமை வடிவாகிய சுஷுப்தியும் நீ அல்ல; இம்மூவகை வடிவத்துக்கும் இவ்வுலகத்துக்கும்  வேறாயிருப்பவன் நீ.

*5* இம்மூவகை வடிவமும் இருவகையில் அடங்கும். ஒன்று-- மற்றொரு பொருளைச் சுட்டியறிந்து கொண்டிருக்கும் நிலைமை; மற்றொன்று--தன்னைக்கூடத் தான் அறியாத நிலைமை. ஜாக்ரத்திலும்  சொப்பனத்திலும் நீ ஏதாவது ஒரு பொருளை முன்னிலையாகக் கொண்டு சுட்டறிவுடையவனாக இருக்கிறாய். ஸுஷுப்தியில் நீ ஒன்றையும் அறியாத, அதாவது உன்னைக் கூட அறியாத நிலைமையில் இருக்கிறாய். இவ்விரண்டு நிலைமையில் உன்னுடைய சகல அனுபவங்களும் அடங்கும். இவ்விரண்டு நிலைமையும் உன் சொந்த நிலை அல்ல. இந்த இரண்டு நிலைமைக்கும் வேறாய் உள்ள மற்றொரு நிலைமையை உடையவன் நீ.

*6* அந்த நிலைதான் என்னவெனில், அதுவே துரீயம் எனப்படும். துரீயம் என்றால், நான்காவது நிலை. ஏன் இப்பெயர் வந்ததென்றால் "நீ கண்ட  ஜாகரம்,சுழுத்தி, சொப்பனம் என்னும் மூன்றும் உன் நிலை அல்ல; இதற்கு வேறாகிய நான்காவது நிலைமையையுடையவன் நீ" என்பதற்காக அந்த நிலைக்கு துரீயம் என்று பெயர் வைக்கப்பட்டது.ஜாகரம், சொப்பனம்,சுழுத்தி  என்னும் மூன்றையும் ஒரு சொப்பனமாக வைத்துக்கொண்டால், அம்மூன்றினின்றும் விழித்த ஜாகரம் துரீயமாகும். ஆகவே, துரீயமானது, ஒடுக்கத்தில்  ஸுஷுப்தியைக்காட்டிலும் ஒடுக்கமுள்ளதாயும், விழிப்பில் ஜாகரத்தைக் காட்டிலும் விழிப்புள்ளதாயும் இருக்கிறது. ஆகையால், ஜாகர, சொப்பன, சுழுத்திகளுக்கு வேறாயுள்ள அந்தத் துரீய நிலையே உன் சொந்த நிலை. அதுவே நீ.

*7* அத்துரீயம் எப்படிப்பட்டதெனில் --அறிவானது ஒன்றையும் சுட்டியறியாது; அவ்வறிவு தன்னையறியாமலும் இராது. அதாவது வேறொரு பொருளையும் அறியாததாயும், ஆனால்  ஜடத்தன்மை இல்லாததாயும் இருக்கிற அந்த அறிவே துரீயமாகும். அதை ஒரு க்ஷணமாவது கண்டவன், உண்மையை கண்டவன். அதுவே நீ. 

*8* இந்தத் துரீயத்தைக் கண்டவனுடைய மேல் நிலை என்னவெனில்--  அவன் அதே நிலையில், அதாவது ஒரு பொருளையும் சுட்டியறியாத நிலையில் எப்பொழுதும் இருப்பான் என்பது ஒருவருடைய அனுபவமும் அன்று.இந்த துரீயத்தைக் கண்டவன் அந்த நிலைமையிலிருந்து இவ்வுலகில் விழிக்கிறான். ஆனால், அவனுக்கு இவ்வுலகம் பழைய உலகம் அன்று; அன்று தான் கண்ட அந்த ஏகமான துரீய அறிவு எதுவோ அதுவே இந்த எல்லாமாய் விளங்குகிறதெனக் காண்கிறான். அந்த அறிவையன்றி இவ்வுலகத்திற்கு அவன் வேறு வடிவம் கற்பித்துக் கொள்ள மாட்டான். ஆகவே, அவன் தனக்குள் கண்ட அதையே  புறம்பில் வேறு வடிவமாகக் காண்கிறான். பழைய பேதம் ஒழிந்து அபேத நிலையை இப்பொழுது அவன் எங்கும் காண்கிறான். இப்பொழுது எல்லாம் அவன். அவனையன்றி ஒன்றும் இல்லை. கண் மூடினும் விழிக்கினும் எது எவ்வாறாயினும் எல்லாம் அவனுக்கு ஒரே நிலை. அதுவே பிரம்ம நிலை. அதுவே உள்ளபடி உள்ள நிலை. அவ்வுண்மை நிலையே நீ.

*9* இதற்குமேல் யாதொரு நிலையும் இல்லை. உள் என்றும் புறம்பு என்றும் சொல்லும் சொல்லுக்கு அவனுக்குப் பொருள் இல்லை. எல்லாம் ஒன்று. அவன் உடம்பும் சொல்லும் எண்ணமும், அவனுக்கென்று சுயநயத்தோடு உழைத்தலை மறந்துவிடும். அவற்றின் உழைப்பெல்லாம் எல்லாருக்கும் எல்லாப் பொருளுக்கும் பொதுவான அருள் உழைப்பு. "தான்" என்ற துண்டு போனது போனது தான். அந்த அகம்பாவத்துக்கு மறுபடி உயிர்த்தெழுதல் ஒரு நாளும் கிடையாது. இதனால் இவன் அப்பொழுதே முக்தன் என்று சொல்லப்படுகிறான். இந்த ஸ்தூல உடம்பு இருந்தாலும், அது அவன் இருப்பு அன்று. இந்த ஸ்தூல உடம்பு இறந்தாலும்,அது அவன் இறப்பு அன்று. அவன் நித்யன். அவனைத் தவிர ஒன்றும் இல்லை. அவனே நீ. 

*10* தெய்வம் என்பது எது?அருள் வடிவமானது. அருள் என்பது எது? தான் என்ற  துண்டான எண்ணம் அற்றது. இந்நிலைமை ஒன்று உண்டு என்பதை ஒருவன் உணர்வது எப்படி? தான் அந்த நிலையை பெற்றால் தான். அந்த நிலையைப் பெற்றவன் "தெய்வத்தோடு ஒன்றாகித் தெய்வத்தை அறிந்தான் "என்று வேதத்தில் புகழப்படுகிறான். ஆதலின், ஒருவன் இவ்வுலகத்தில் அடையக்கூடிய நன்மையும், உலகத்துக்குச் செய்யக்கூடிய நன்மையும் இந்த அபேத நிலையைப் பெறுதலே. உண்மையில் இதை அன்றி வேறு நிலைகள் இல்லை. வேறு நிலைகளெல்லாம் அறியாக் காலத்தில் தோற்றுபவை. அறிந்தவனுக்கு இருப்பது ஒரே நிலைதான் அதுவே நீ.

No comments:

Post a Comment

நன்றி....