Tuesday, August 4, 2020

எல்லாம் ஒன்றே

முக்திக்கு மிகச்சிறந்த வழி என்று ரமண பகவானால் கூறப்பட்ட "எல்லாம் ஒன்றே" என்னும் நூலை இனி சிந்திப்போம்..

முதல் பாகம்

1. ஒன்று.

*1* உன்னால் காணப்பட்ட இவ்வுலகமும், இவ்வுலகத்தைக் காண்கிற நீயும் எல்லாம் ஒன்றே.

*2* நான் என்றும், நீ என்றும், அவன் என்றும், அவள் என்றும், அது என்றும் நீ எண்ணுகிற எல்லாம் ஒன்றே.

*3* சித்து- அதாவது அறிவுடையது என்று நீ எண்ணுகிற உயிர்களும், ஜடம்- அதாவது அறிவற்றது என்று நீ எண்ணுகிற பூமி,ஜலம், நெருப்பு, காற்று முதலியவைகளும் எல்லாம் ஒன்றே.

*4* எல்லாம் ஒன்று என்று நீ எண்ணுவதனால் உண்டாகும் நன்மை, வேறு வேறு என்று எண்ணுவதனால் உண்டாவதில்லை. ஆகையால் எல்லாம் ஒன்றே.

*5* எல்லாம் ஒன்று என்று எண்ணுவதனால் உனக்கும் நன்மை; பிறருக்கும் நன்மை. ஆகையால் எல்லாம் ஒன்றே.

*6* நான் வேறு, நீ வேறு, அவன் வேறு என்று இவ்வாறு எண்ணுகிறவன், தனக்கு ஒருவிதம் நடப்பான்; பிறருக்கு ஒருவிதம் நடப்பான். அவ்வாறு நடக்காமலிருக்க அவனால் முடியாது. நான் வேறு, பிறர் வேறு என்று எண்ணிக்கொண்டிருக்கும் எண்ணம் ஒரு விதையாக இருந்து, தனக்கு வேறு பிறருக்கு வேறாக நடக்கிற பக்ஷபாதமாகிய மரத்தைத் தோற்றுவிக்கின்றது. தானும் பிறரும் எல்லாமும் ஒன்றே என்று அறிந்தவன், எப்படி நியாயம் தவறி நடப்பான்? பேதம் என்கிற விதை உள்ளவரையில் உன்னை அறியாமலே நீ தீமையில் பக்ஷபாதமாய் நடத்தலில் இறங்கிவிடுவாய். ஆதலால், பேதபுத்தியை விட்டுவிடு. எல்லாம் ஒன்றே.

No comments:

Post a Comment

நன்றி....