எல்லாம் ஒன்றே என்ற நூலின் முதல் பாகத்தின் தொடர்ச்சி...
*7* இவ்வுலகத்தில் பொருள்களெல்லாம் வேறுவேறாகத் தோன்றுகின்றனவே, ஒன்று என்று எப்படி எண்ணுவேன், அதற்கு ஒரு வழி உண்டா? என்று கேள்; சொல்லுகிறேன்: ஒரு மரத்தில் இலை வேறு,பூ வேறு, காய் வேறு,கிளை வேறு - இப்படி காண்கிறோமே, ஆனாலும் அவையெல்லாம் ஒன்றே. மரம் என்ற சொல்லில் அவ்வளவும் அடங்கியதே. அவ்வளவுக்கும் மூலம் ஒன்று; உயிர் ஒன்று; அது போலவே, இவ்வுலகில் வேறு வேறாகக் காணப்படும் - எல்லா பொருள், எல்லா உடல், எல்லா உயிருக்கும் - மூலம் ஒன்றே, உயிர் ஒன்றே. ஆகையால் எல்லாம் ஒன்றே.
*8* ஓ! நல்லவனே! எல்லாம் ஒன்றென்பது நன்மைக்கோ தீமைக்கோ, நீயே கவனி. தன்னைப் போலப் பிறரையும் பிறரைப் போல தன்னையும் பார்க்கிறவனே நன்மையில் நடப்பான் என்றால், தானாகவே பிறரையும் பிறராகவே தன்னையும் எண்ணுகிறவனுக்குத் தீமை எப்படி வரும்? ஒன்றே என்று எண்ணுவதை காட்டிலும் உயர்ந்த வழி நன்மைக்கு வேறு இருக்குமானால் சொல். ஒரு நாளும் வேறு வழிகள் இவ்வளவு நன்மை தரமாட்டா. ஒன்றென்று எண்ணுவதை விட அதிகமாக எப்படி மற்ற உயிர்களிடத்தில் ஒருவன் அன்பாய் இருக்க முடியும். ஒன்றென்றே எண்ணு; ஒன்றென்றே நேசி. உண்மையில் எல்லாம் ஒன்றே.
*9* ஒன்றென்று அறிந்தவன் மனது அடைந்த சாந்தம், ஆறுதல் யாருக்கு உண்டு! அவனுக்குக் கவலை இல்லை. எல்லாருடைய நன்மையும் அவனுடைய நன்மையாயிருக்கிறது. பிள்ளைகளினுடைய நன்மையை, தாய் தனது நன்மையாக கருதுகிறாள். ஆயினும், தான் வேறு, அந்தப் பிள்ளைகள் வேறு என்ற ஒரு எண்ணம் அவளுக்கு இருப்பதனாலே, அவள் அன்பும் பரிபூரண அன்பு அன்று. எல்லாம் ஒன்று என்று அறிந்த ஞானியின் அன்போ, தாய் அன்பிலும் மேலான அன்பு. ஒன்றென்று அறிந்து கொள்வதை விட இவ்வன்பு வருவதற்கு வேறு வழி இல்லை. ஆதலால் எல்லாம் ஒன்றே.
*10* இவ்வுலகமெல்லாம் உன்னுடைய அழியா உடம்பாகவும், நீ இவ்வுலகத் துக்கெல்லாம் அழியாத உயிராகவும் பார். இவ்வாறு நீ பார்ப்பதில் தீமை உண்டானால் சொல். தீமை இல்லாத வழியில் நடப்பதற்கு யார்தான் அஞ்சுவார்கள்? தைரியங்கொள். வேதம் இந்த உண்மையைத்தான் சொல்லுகிறது. உன்னைத் தவிர ஒன்றும் இல்லை. எல்லா நன்மையும் உனக்கு உண்டு. நீ நன்மையே வடிவாகிறாய். உன்னால் பிறர் அடைவதெல்லாம் நன்மையே. தன் உயிருக்கும் தன் உடலுக்கும் தீமை செய்வார் யார்? உடலில் புண் உண்டானால் சிகிச்சை செய்கிறோம்; அதில் உடலுக்குச் சிறிது துன்பம் உண்டாயினும் அது நன்மையின் பொருட்டே. அவ்வாறு நீ செய்கிற சில செய்கைகளும் இருக்கும்; அதுவும் உலக நன்மையின் பொருட்டே. அதனால் நீ பேத புத்தி உடையவனாகமாட்டாய். சுருக்கமாய்ச் சொல்லுகிறேன்:- ஒன்று என்று உணர்ந்தவன் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடப்பான். ஒன்று என்ற உணர்ச்சி, அவனை உண்மையில் நடத்துகிறது. அவனுக்குத் தவறுதல் என்பது கிடையாது. அவன்தான் உலகத்தில் கண்காணவந்த தெய்வம். எல்லாம் ஒன்றே.
No comments:
Post a Comment
நன்றி....