பாபாஜி ஒருமுறை, "காய்கறிகளைக் கூட சரியாக வெட்டத் தெரியாமலோ, அரிசியினை முழுமையாக சமைக்கத் தெரியாமலோ இருந்தால், இந்த உலகத்தில் நீ எப்படி அதி உன்னதமான பூரணத்தை கண்டு பிடிப்பாய்? இது எப்படி இருக்கிறது என்றால், ஒருவன் நாள் முழுவதும் பொய் சொல்லிவிட்டு முழுமையான சத்தியத்தை தேடுகிறேன் என்று சொல்வது போல இருக்கிறது..." என்று கூறினார். மேலும் அவர், அரசியல்வாதிகள் எல்லாம் சத்யமேவ ஜெயதே என்று உண்மையின் மேல் உறுதிமொழி எடுத்துக் கொள்வதைப் போல நாடகம் ஆடாதே. நமது அன்றாட வாழ்க்கையை சரிவர முழுமைப்படுத்து. அதுதான் உண்மையான பூரணத்தை அடைய வழி என்றும் சொன்னார்.
ஒரு மாலைப்பொழுதில், இரவு நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில், பாபாஜியிடமிருந்து ஒரு வித்யாசமான பாடத்தை கற்றுக் கொண்டேன். தூனியை எதிர் நோக்கி நாங்கள் உட்கார்ந்து இருக்க, அக்னி ஜுவாலைகள் நாட்டியமாடிக் கொண்டிருந்தன. பாபாஜி, "அக்னி எல்லா நாகரீகங்களிலும் புனிதமாகக் கருதப்பட்டு வந்தது. வேத காலங்களிலே அக்னிபகவான் ஒவ்வொருநாளும் பிரார்த்திக்கப்பட்டு வந்திருக்கிறார். எப்போதாவது அக்னி ஏன் இவ்வளவு முக்கியமாக கருதப்பட்டு வந்தது என்பதை நினைத்துப் பார்த்து இருக்கிறாயா? என்று கேட்டார். "உணவு சமைப்பதற்கு நெருப்பு வேண்டும்! மேலும், குளிர் காலங்களில் நம்மை உஷ்ணமாக வைத்துக்கொள்ளவும், காட்டு மிருகங்களை நெருங்கவிடாமல் தூரத்தில் நிறுத்தவும் அக்னி உதவுகிறது. அதனால்தான் என்னவோ, பண்டைய காலத்தில் அக்னிக்கு மதிப்பு கொடுத்தனர்" என்று கூறினேன். பாபாஜி சிரித்தார். "ஆம், ஆம். அதற்கு மேலேயும் பயன்கள் இருக்கின்றன. பண்டைய காலங்களில் தீப்பெட்டி கிடையாது. நெருப்பை உண்டாக்குவதற்கு இரு காய்ந்த குச்சிகளை வைத்துக் கொண்டு அக்னி பகவானிடம் பிரார்த்திப்பார்கள். ஒரு தீப்பொறி ஏற்பட்டு விட்டால் அதுவே அதிசயமாகக் கருதப்பட்டது... "அப்போதைய சிந்தனையாளர்கள், அந்த நெருப்பு, அங்கே உண்டாவதற்கு முன்னால் எங்கே இருந்தது என்று கேட்டார்கள். அந்த கட்டைகளிலே தான் அது ஒளிந்திருந்தது. சமயத்திற்கு ஏற்றவாறு வெளிப்பட்டது. எனவே, அக்னி ஆத்மாவின் அடையாளமாக கருதப்பட்டு, எங்கும் வியாபித்து, சில சூழ்நிலைகளின் கட்டாயங்களுக்கு ஏற்ப காட்சியளிக்கிறது... "மற்றொரு காரணம், அக்னி ஆத்மாவின் அடையாளமாக உபயோகிக்கப்பட்டது. ஏனென்றால், எப்பொழுதும் அக்னி மேலெழுந்தவாறுதான் எரிகிறது. எரிகிற கட்டையைக் கீழ்நோக்கி வைத்தாலும் தீயின் ஜுவாலைகள் மேல்நோக்கி தான் எழுகின்றன. அதேபோல ஒரு சிறிய தீப்பொறியே, ஒரு முழு காட்டை எரித்து விடுவதற்கு போதுமானது... ஒரு தீயின் ஜுவாலையிலிருந்து ஆயிரம் மெழுகுவர்த்திகளைப் பற்ற வைக்கலாம். அதற்குப் பிறகும் முந்தைய தீ ஜுவாலை எரிந்துகொண்டுதான் இருக்கும். எனவே,ஆத்மாவிற்கு இதைவிட வேறு எந்த அடையாளம் மிக ஏற்றதாக இருக்க முடியும்...?
"நெருப்பு அழிக்கும் சக்தியாக மாறும்போது, எல்லாவற்றையும் சாம்பலாக ஆக்குகிறது. தீயானது அனைத்தையும் கருடிக்கிறது.. "இரக்க குணத்திற்கும், அன்பிற்கும் உரிமையான புனித அக்கினியே எல்லா சுய நலங்களையும் எரித்துச் சாம்பலாக ஆக்குகிறது. ஆஸ்திகர்கள், தங்களுக்கு எந்த வரம்புகளும் இல்லை என்று எடுத்துக் காட்டுவதற்காக இந்தச் சாம்பலை உடல் முழுவதும் பூசிக் கொள்கிறார்கள்... "பார்வைக்கு தெரியும் நெருப்பு மட்டும்தான், அக்னி என்று அழைக்கப்படுவதில்லை. எளிதில் தீப்பிடிக்கும் எல்லாப் பொருள்களும் அக்னி தான். மனித உடலில் ஜீரணத்திற்காக நடக்கும் எல்லா ஆக்க, அழித்தல் பணிகளும் ஜீரண அக்னி என்று அழைக்கப்படும். ஆசை என்னும் நெருப்பு அதிகமானாலும் குறைவானாலும் அதுவும் அக்னிதான்... "உனக்கு முன்பு ஒரு காதலி இருந்திருந்தால் அவளை முந்தைய நெருப்பு என்று கூறுவது இல்லையா?யாரும் முந்தைய காற்று என்றோ, முந்தைய தண்ணீர் என்றோ குறிப்பிடுவது இல்லை. ஏனென்றால், அன்பு, ஆசை, உள்ளுணர்ச்சி எல்லாமே ஒரு விதமான நெருப்புதான்... "கற்பனை என்பது கூட நெருப்புதான். அதனால்தான், அக்னி பல காலமாக வணங்கப்பட்டு வருகிறது. நாத் பரம்பரையில் இருக்கும் எங்களுக்கு அக்னி, எங்களைச் சேர்ந்த சுய அங்கமாகவே ஆகிவிட்டது... "தூனியைப் பற்றவைத்து எரியும் ஜுவாலைகளை பார்த்தவாறே மணிக்கணக்கில் அமர்ந்து இருப்போம். அக்னி எங்களது நண்பனுமாய் பாதுகாவலனுமாய் ஆகிவிட்டது. எங்களது மனது அந்த ஜுவாலைகளுடன் ஒன்றுபட்டு கலந்துவிடும்.... " இயற்கையின் எல்லா தன்மைகளைப் போல, அக்னிக்கும், தனியாக ஒரு மனது இருக்கிறது. எங்களது மனதும் தீயுடன் அதாவது அக்னி பகவானுடன், இரண்டறக் கலந்து விடுகிறது. அதனால் தான், ஜுவாலைகள் நாங்கள் கேட்கும் எந்த விருப்பத்தையும் நிறைவேற்றுகிறது. இதை நீ நம்பித்தான் ஆக வேண்டும்... "எனவே, நம் உள்ளே இருக்கும் அக்னியான குண்டலினி, பரந்த உலகின் ஆக்கல், அழித்தல் சக்தியின் அங்கமாகத்தான் உள்ளது. அது, வெளியே உள்ள அகில உலக ஆக்கல் அழித்தல் சக்திகளுடன் ஒன்றுபட்டு இந்த தூனியில் பிரவேசித்து காட்சியளிக்கிறது... "தீ ஜுவாலைகள், தூனியிலிருந்து ஆர்த்தெழுந்து, ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரைக்குச் செல்வதால் மனிதன் கடவுள் ஆகிறான். அப்பொழுது பரந்துவிரிந்த எண்ண உணர்வுகளை அணுகவும் செய்யலாம், உபயோகிக்கவும் செய்யலாம், கவலைகள் மறையும். எச்சரிக்கையுடன் கவனித்தல் அவசியம்."
"பாபாஜி, யோகாவைப் பற்றியும் யோகப் பயிற்சியை பற்றியும் சொல்லுங்கள்"என்றேன். பாபாஜி புன்னகையுடன். "மது, யோகா புராதனமான விஞ்ஞானம். பின் பதஞ்சலி முனிவரால், வரைமுறைப்படுத்தப்பட்டது. பதஞ்சலியால் எழுதப்பட்ட அஷ்டாங்க யோக சாஸ்திரம், விலைமதிக்க முடியாத மாணிக்கம்... "எட்டு அங்கங்கள் கொண்ட யோகாவின் குறிக்கோள், சித்த விருத்தி நிரோதன். அதாவது மனதின் சஞ்சலங்களைத் தவிர்த்துவிடுவது என்பதாகும். தியானத்திற்குரிய யோகாவில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறை திட்டங்களை பயிற்சி செய்து அதன் பயிற்சிகளான ஆசனா, பிராணாயாமா, பந்தம், முத்திரைகள், மேலும் கிரியா மூலம் மனது அமைதிப்படுத்தப்பட்ட பிறகு அது சமாதி நிலைக்கு நுழைகிறது....
"சமாதியில் பல வகைகள் இருக்கின்றன. சமாதி நிலை என்பது தான் அடிப்படை தேவையாகும். அதற்குப் பிறகு, உபநிஷதங்களின் கருத்துக்களைப் புரிந்து கொண்ட மனது, உயர்நிலை உணர்வுகளின் நிலைகளுக்குள் நுழைகிறது. அதனால், எல்லா கட்டுப்பாடுகளில் இருந்தும் விடுதலை அடைகிறது. இதுதான் விடுதலை நிலை அதாவது கைவல்ய நிலை. இதுதான் யோகாவின் இறுதிக் குறிக்கோள் ஆகும்." "ஆனால், பாபாஜி! யோக சக்திகள், சித்திகள், அமானுஷ்ய சக்திகளாக எங்கும் வியாபித்து இருப்பது, எல்லா சக்திகளையும் பெற்று சர்வ வல்லமையாக இருப்பது,எல்லாம் அறிந்த சர்வ ஞானியாக இருப்பது இவைகளை எல்லாம் பற்றி என்ன சொல்கிறீர்கள்?"
பாபாஜி சத்தம் போட்டு சிரித்து விட்டு, "எல்லோரும் யோக சக்திகளின் மீதே நாட்டம் கொள்கின்றனர். எப்படி யோக சக்திகளை பெறுவது என்று ஒரு புத்தகத்திற்கு பெயரிட்டு விட்டால், அந்தப் புத்தகம் சூடான இட்லிகள் போல விற்றுவிடும்... "யோக சக்திகள் இருக்கின்றன. ஆனால் அவை மிக அரிதாக இருக்கின்றன. அற்புதங்கள் என கூறப்படுபவைகளை நிரூபித்து காண்பிப்பது எல்லாம் வெறும் தந்திர வேலைகள் தான். யோகா செய்யும் பொழுது, மனது ஒருமுக படுகிறது. சாதாரண மனிதன் ஒரு வேலையை செய்து முடிக்க பல வருடங்கள் ஆகும் போது யோகிகளால், அதே வேலையை குறுகிய காலத்திலேயே முடிக்க முடிகிறது.... "மேலும் மனது சஞ்சலம் இல்லாமல் இருந்து, அமைதியாக இருப்பதாலும், 'தான்' என்ற சுயநல எண்ணங்கள் இல்லாமல் இருப்பதாலும், இதர மனதுகளுடன் ஒரு தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறது. அதனால் இன்னொரு மனதினில் ஓடும் எண்ணங்களை யோகியால் உணரமுடிகிறது...
" இதனை ஆரம்ப நிலை யோகிகளால் கூட உணர முடியும். இந்த உண்மையை சரியான விதத்தில் புரிந்து கொள்ளாவிட்டால், யோகியின் எண்ணங்களும், நடவடிக்கைகளும், பக்குவப்படாத மனதினருக்கு மிகப்பெரிய வினோதங்களாகவும், ஏன்.. அற்புதங்களாகவும் கூடத் தென்படுகின்றன... "ஒன்று தெரிந்து கொள். ஆண் பெண் சேர்க்கையால் உருவான ஆணோ, பெண்ணோ,அவர்கள் எவ்வளவு மிக உயர் நிலையில் உள்ளவராக இருந்தாலும், சர்வ வியாபியாகவோ, சர்வ சக்தி படைத்தவராகவோ அல்லது சர்வ ஞானியாகவோ இருக்கவே முடியாது...
" ஒரு உடல் திடகாத்திரமான உணவை உண்டாலும், யோகாவின் மூலம் புத்துயிர் பெற்றிருந்தாலும், எவ்வளவு காலமானாலும் இறந்துதான் ஆகவேண்டும்...
"எனது குருவான ஸ்ரீ பாபாஜி கூட, பல நூறு வருடங்கள் வாழ்ந்து இருந்தாலும் உயிரை நீத்து தான் ஆக வேண்டும். நானும் ஒருநாள் இறந்துதான் போவேன்...
"மனிதன் எதை அற்புதங்கள் என்று அழைக்கிறானோ அவை எல்லாம் மனிதனால் இன்னும் புரிந்து கொள்ளப்படாத இயற்கையின் சில கோட்பாடுகளினால் நடக்கிறது. எந்த யோகி, இந்தக் கோட்பாடுகளை அறிந்து இருக்கிறாரோ, அவரால் இவைகளை எல்லாம் செய்ய முடியும்" என்றார்.
"உண்மை என்னவென்றால் புத்திக் கூர்மையுடன் இருக்கக்கூடிய எந்த மனிதனாலும் எல்லாம் அறிந்த சர்வ ஞானியாக இருக்கவே முடியாது. ஆனால் இன்னொரு மனிதனின் மனதுடன், தேவைப்படும் பொழுது இணக்கமாகும் சக்தியை முயன்று அடையலாம். அப்படி அடைந்த அறிவை தற்காலிகமாக சில பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ளவும் செய்யலாம்.
"தெய்வமே தன்னை வெளிப்படுத்திக் கொள்வது போல பிரம்மாண்டமாக அமைந்து இருக்கும் இப்படிப்பட்ட இயற்கை தான் தெய்வீகம். உன்னுள்ளே நீ தேடும் தெய்வம் இங்கே உன் கண்களுக்கு எதிரிலேயே இருக்கிறது. அமைதியாக தளர்வாக இரு. நறுமணம் நிறைந்த காற்றினை சுவாசி!" என்று பாபாஜி அந்த சொர்க்கத்தை அனுபவிக்கும் வழியைக் கற்றுக் கொடுத்தார்.
"பாபாஜி, இஷாவாஸ்ய உபநிஷதம் எதை நிலை நிறுத்த பார்க்கிறது என்பதை இப்பொழுது புரிந்து கொண்டேன். 'இஷா வாஸ்யம் இதம் சர்வம்...'அதாவது எல்லாவற்றையும் விட பிரதானமான ஆண்டவன், எல்லாவற்றிலும் உள்ளே மறைந்து வசித்துக் கொண்டிருக்கிறான் என்று நெடுங்காலமாக நினைத்துக்கொண்டிருந்தேன். இப்பொழுது என்ன புரிந்து கொண்டேன் என்றால், நாம் எவற்றையெல்லாம் பார்க்கிறோமோ, எவற்றையெல்லாம் முகர்கிறோமோ, ஸ்பர்சிக்கிறோமோ, சுவைக்கிறோமோ,அவையெல்லாம் இஷா என்னும் ஆண்டவனைத் தவிர வேறில்லை. ஆண்டவனை வேறு எங்கும் தேட வேண்டியதில்லை..."
கண்களைத் திறந்து வைத்துக்கொண்டே தியானம் செய்யும் முறையை பாபாஜி எனக்கு விளக்கினார்.
"பலருக்கு கண்களை மூடியவாறு தியானம் செய்வது எளிதாக இருப்பதில்லை. அவர்கள் தியானத்தில் ஆழ்ந்து இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், வெளி உலகத்துடன் வைத்திருக்கும் இணைப்புகள் துண்டிக்கப்படும் பொழுது, மனது, உள்ளேயே ஒரு தனி உலகைத் தந்திரமாக உருவாக்கிக் கொண்டு, அந்த எண்ண ஓட்டங்களின் பிடியில் சிக்கிக் கொள்ளும்...
"எனவே அதற்கு பதிலாக உனது கண்களை திறந்து கொண்டு, கீழே ஓடிக்கொண்டிருக்கும் கங்கையைப் பார். உயிரோட்டம் போலவே இடைவிடாமல் பாய்ந்து ஓடிக் கொண்டிருப்பதைப் பார். அசைவற்ற குட்டையைப் போல எங்கேயும் தேங்கி விடாமல், எப்பொழுதும் மாற்றம் அடைந்து கொண்டு, எப்பொழுதும் புதிதாக பளிங்கு போல தெள்ளத் தெளிவாக, தனது வேர்களில் இருந்து விடுபட்டு, பிரமாண்டமான பிரம்மனாகவே ஆகிறது... "பார்த்துக்கொண்டு இருக்கும்பொழுதே எல்லையில்லாத பிரபஞ்சத்தின் ஓட்டத்தில் நீயும் ஒன்றிவிடுவாய். எந்தவிதக் கற்பனையும் செய்யாதே. திறந்த மனதுடன், எந்தவிதமான முன் குறிக்கோளும், முன் அபிப்ராயமும் இல்லாமல், கவனி. தடை எதுவும் இல்லாமல் போ. அதில் மகிழ்ச்சி கொள்..."
'ஒவ்வொரு நாளும் 13 மணிநேரம் என்ற கணக்கில் 13 ஆண்டுகள் நீ தியானம் செய்து வந்து இருக்கலாம். ஆனால் ஒரு உயிர் வலியினால் துடிக்கும் போது, அதன் அழுகைக் குரலை உன்னால் கேட்க முடியவில்லை என்றால், உனது 13 ஆண்டுகளின் தியானமும் வீணாகிவிட்டது. தியானம் உனது இருதயத்தை மிருதுவாக்கவில்லை என்றால், அதை ஜன்னல் வழியே எறிந்து விடு. அப்படிப்பட்ட தியானத்தினால் உனக்கு எந்த உபயோகமும் இல்லை!'
( தொடரும்)
No comments:
Post a Comment
நன்றி....