திரு. லக்ஷ்மண் அவர்களின் முகநூல் பதிவுகள்
கடவுளைநம்பினால் உங்களுக்கு எந்த கஷ்டமும் வராதா?
***
நேற்று காலை முதலே கடவுள் உண்மையிலேயே பாதுகாப்பு தரமுடியுமா? கடவுளை நம்பினால் எந்த கஷ்டமும் வராதா? என்பதிலேயே சிந்தனையோட்டம் ஓடிக்கொண்டிருந்தது. அதை சுமந்து கொண்டே பேருந்தில் ஏறினேன்.
வழியில் அழகை பார்த்துக்கொண்டே வந்தாலும் அந்த சிந்தனை வேறு எங்கும் நகரவில்லை. அப்பொழுது திடீரென ஒரு மின்னல் வெட்டியது.
ஏசு நாதர் போன்ற ஒரு முக்தரையே அடித்து அடித்து சிலுவையில் அறைந்த பொழுது காப்பாற்றாத கடவுள் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு வரும் சாதாரண பிரச்சனைகளை எல்லாம் தீர்ப்பார் என்று நம்புவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று.
கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை. அதற்கு பிறகு சில மனிநேரங்கள் நிதானம் இல்லை.தடுமாறிக்கொண்டிருந்தேன். இறைதூதருக்கு இது தான் நிலை என்றால் நாம் எம்மாத்திரம்? இங்கே கடவுள் எங்கே? அந்த ஆற்றலுக்கு என்ன தான் அர்த்தம்?
கிருஸ்துவ நண்பர்கள் இது போன்ற கேள்விகளை கண்டிப்பாக எதிர்கொண்டிருந்துப்பார்கள். அதற்கு விடையை பைபிளோ அல்லது அவர்களின் குரு மார்களோ கண்டிப்பாக கொடுத்திருப்பார்கள். எனக்கு அது எதுவும் தெரியாது. இதுவரை பைபிளும் படித்ததில்லை. மிகச்சில வரிகள் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாய் தெரியும்.
எப்படி இந்த குழப்பத்தில் இருந்து விடுபடுவது என்று சிந்தித்துக்கொண்டிருந்த பொழுது , குழந்தை கருகொள்ள தாமதமாவது குறித்து ஒரு 40 வயது பெண் கலந்தாய்வுக்கு வந்திருந்தார். வயதின் காரணமாகவும் குழந்தைப்பிறப்பிற்கான சாதகம் மிகக் குறைவாக இருக்குமே என்று ஏற்கனவே இருந்த மனசஞ்சலம் மேலும் அதிகமானது. யோசனையுடன் ஜாதகம் பார்க்கத்துவங்ினேன்.
நல்ல வேளை இன்னும் ஒரு வருடத்திற்குள்ளாகவே உருவாகிவிடும் சாத்தியம் மிக அதிமாக இருந்தது. சரியான நேரத்திற்கு வந்திருந்தார். ( இதை பற்றி விரிவாக தனியாக எழுதுகிறேன் ). பத்து வருடமாக குழந்தை இல்லாமல் இருப்பவற்கு தீர்வு தர முடிந்ததை நினைத்து மனது சற்றே நிம்மதி அடைந்தது. மறுகனம் மேலும் ஒரு மின்னல் வெட்டியது.
'பிதாவே, இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதவர்கள்’என்ற ஏசுபிரான் சிலுவையில் அறையும் பொழுது கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.
முள்கீரிடம் அணிவித்து சிலுவையை சுமந்து கை கால்கள் எல்லாம் ஆணியில் அறையப்பட்டு ரத்தம் வழிய வழிய தொங்கிக்கொண்டிருந்த ஏசுநாதரிடம் வந்த வார்த்தைகள் ''பிதாவே, இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதவர்கள்’ .
எனக்கு கண்கள் பணித்துவிட்டது. கடவுள் எங்கே இருக்கிறார் என்று முட்டாள்தனமாக தேடியிருக்கிறேன். கடவுள் அந்த வார்த்தைகளை சொல்லியவனுக்குள் தான் இருக்கிறார். அருள் தன்மை இருப்பதாலேயே அத்துனை பெரிய வலியை தாங்க முடிந்திருக்கிறது. வலியெல்லாம் கடந்து அந்த வார்த்தைகளை சொல்ல முடிந்திருக்கிறது.
***
கடவுளை வேண்டுவது என்பது உங்களை கஷ்டத்தில் இருந்து காப்பதற்கு அல்ல. கஷ்டம் ஏற்படும் பொழுதும் அதை தாங்கும் சக்தியை உண்டு பண்ணுவதற்காக என்ற வெளிச்சம் கிடைத்தது.
கடவுள் தன்மை உங்களுக்குள் எவ்வளவு இருந்தாலும் கடவுள் தன்மை இல்லாதவனுக்கு நீங்கள் சக மனிதன் தான். எதிரியாகவும் நினைப்பான். உங்களுக்கு கஷ்டம் தரவே விரும்புவான். அவனிடம் இருந்தும் உங்களை காத்துக்கொள்ள நீங்கள் செய்யவேண்டியது உங்கள் கடவுள் தன்மையை அதிகப்படுத்திக்கொண்டே இருப்பது தான்.
அதை எப்படி அதிகப்படுத்துவது? எதிரிகளுக்கும் நல்லதே நினைக்கும் பொழுது அருள் அதிகமாகும். இந்த செய்தியை நாம் உணரவே ஏசுபிரான் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறார்.
இதை பற்றி ஏதாவது பைபிளில் இருக்கும் என்ற நம்பிக்கையில் தேடினேன். இருந்தது.
‘நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்,
உங்கள் சத்ருக்களை சிநேகியுங்கள்;
உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்;
உங்களைப் பகைக்கிறவர் களுக்கு நன்மை செய்யுங்கள்;
உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும்,
உங்களைத் துன்பப் படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்’.
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.
யார் ஒருவன் எதிரிகளையும ஏற்றுக்கொள்வதற்காக கடவுளின் பெயரை பயன்படுத்துகிறானோ அவன் இறைநிலையை அடைகிறான். எதிரிகளை உருவாக்குவதற்காக யார் ஒருவன் கடவுளின் பெயரை பயன்படுத்துகிறானோ அவன் சாத்தான் ஆகிறான்.
அதனால் தான் அடித்தவர்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாகினர். அதை அனைத்தும் தாங்கி அவர்களுக்காக ஜபித்தவனின் பெயர் இரண்டாயிரம் ஆண்டுகளாய் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
நன்றி
திரு #thirulakshman #Thiru
No comments:
Post a Comment
நன்றி....